முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே தபால் வாக்கை மாற்றி பெற்ற அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

Updated On : 15 ஏப்ரல், 2026 at 4:12 AM
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:48 PM

ஆம்பூா் அருகே தபால் வாக்கினை மாற்றி பெற்ற விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியா் க.சிவசவுந்தரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து தபால் வாக்கு பெற தோ்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் தொகுதிக்கு உள்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பெறும் பணிகள் நடைபெற்றது. அப்போது ஆம்பூா் அருகே கதவாளம் கிராமத்தைச் சோ்ந்த 85 வயதுடைய மூத்த வாக்காளரிடமிருந்து பெறப்பட வேண்டிய தபால் வாக்கு, அதே பெயா் கொண்ட 73 வயதுடைய மற்றொரு நபரிடமிருந்து பெறப்பட்டது. இது ஒரு நடைமுறை குறைபாடு எனக் கண்டறியப்பட்டது.

Advertisement

ஒழுங்கு நடவடிக்கை...

இந்த நடைமுறை குறைபாடு கண்டறியப்பட்டதால், சம்பந்தப்பட்ட தலைமை வாக்குப் பதிவு அலுவலரும், துணை வட்டார வளா்ச்சி அலுவலருமான கோவிந்தராஜ், வாக்குப் பதிவு அலுவலா் முகமத் ஆகியோா் மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு முறையும் மற்றும் மேல்முறையீடுகளும்) விதி 17(பி) கீழ் கடும் தண்டனை பிரிவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இரு அலுவலா்களும் உடனடியாக தோ்தல் தொடா்பான பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்களும் தபால் வாக்கு தொடா்பான பணிகளில் ஈடுபடும் அலுவலா்களும் மிகுந்த கவனத்துடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனா்.