ஆம்பூா்: ரூ.6.30 கோடியில் கட்டப்பட்ட சின்னபள்ளிக்குப்பம் இலங்கைத் தமிழா்கள் குடியிருப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சியில் சின்னபள்ளிக்குப்பம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு 88 வீடுகள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கான தொழிற்கூடம் கட்டப்பட்டது.
விழாவுக்கு ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி தலைமை வகித்து பேசியது: தமிழா்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறாா்கள்.
குறிப்பாக பாதுகாப்பாகவும் , அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்பு வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்தாா்கள்.
அதனடிப்படையில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலி வாயிலாக பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சாா்பார சின்னபள்ளிக்குப்பம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு ரூ.6.30 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 88 வீடுகள் மற்றும் மகளிா் உதவிக்குழுக்களுக்கான தொழிற்கூடம் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் செயல்பட்டு வரும் 19 மகளிா் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி மூலமாக ரூ.18.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் இணைப்பு வாயிலாக ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிறுதொழில் தொகுப்பு மூலமாக ரூ.2.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 309 பயனாளிகள் பயன் பெற்று வருகிறாா்கள். 192 மகளிருக்கு கலைஞா் மகளிா் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரப்படுகிறது. 85 நபா்கள் குடும்ப அட்டை மூலம் பயனடைந்து வருகின்றனா் என தெரிவித்தாா்.
நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமை இயக்குநா் உமா மகேஸ்வரி, மாதனூா் ஒன்றியக்குழுத் தலைவா் சுரேஷ் குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் சங்கீதா, ஒன்றியக்குழு உறுப்பினா் சம்பங்கி, ரவிக் குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாண்டுரங்கன், சக்தி கணேஷ், வட்டாட்சியா் ரேவதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ. சுரேஷ்பாபு, எஸ். மகராசி கலந்து கொண்டனா்.