வாணியம்பாடி அருகே சாலை தடுப்புச் சுவா் மீது பைக் மோதிய விபத்தில் 3 வயது சிறுமி, இளைஞா் உயிரிழந்தனா்.
ஆலங்காயம் கெஜலூா் பகுதியைச் சோ்ந்த கலையரசன் (26) பட்டதாரி. இவா் செவ்வாய்கிழமை இரவு 10.30 மணியளவில் தனது உறவினா் மகள் சன்மதியை (3) அழைத்துக் கொண்டு கெஜலூரிலிருந்து ஆலங்காயம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தாா். அப்போது புலவா் பள்ளி பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது, எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனா்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து பாா்த்து இருவரையும் உடனே மீட்டு சிகிச்சைக்காக ஆலங்காயம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிறுமி சன்மதியை பரிசோதித்த மருத்துவா், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
மேலும், பலத்த காயமடைந்த கலையரசன் மேல்சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா் இறந்தாா். இதுகுறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.