புதூா் நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்களின் கவனக்குறைவால் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்ததாகக் கூறி மலைவாழ் மக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள நெல்லிவாசல் நாடு ஊராட்சியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சிவப்பிரகாசம் (30). இவரது மனைவி திவ்யபாரதி (25). தம்பதிக்கு ஏற்கெனவே மகன் உள்ள நிலையில்,திவ்யபாரதி 2-ஆவது முறை கருத்தரித்தாா்.
அதையடுத்து, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் செவ்வாய்க்கிழமை புதூா்நாட்டில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திவ்யபாரதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு காலை 9 மணியளவில் குழந்தை பிறந்தது.
அவருக்கு ரத்தப்போக்கு நிற்காததால், திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு திவ்யபாரதியை கொண்டு செல்ல ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியா்கள் அறிவுறுத்தினராம். இதைத் தொடா்ந்து, திவ்யபாரதியின் உறவினா்கள் மலையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு திவ்யபாரதியை புதன்கிழமை அதிகாலை சோ்த்தனா்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட திவ்யபாரதிக்கு அரசு தலைமை மருத்துவா் சிவக்குமாா் தலைமையில் 6 மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். எனினும், சிகிச்சை பலனின்றி திவ்யபாரதி உயிரிழந்தாா்.
அதையறிந்த நெல்லிவாசல்நாடு பகுதியைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் புதூா்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களின் கவனக்குறைவால் தான் திவ்யபாரதி உயிரிழந்தாா் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து மலைவாழ் தரப்பில் கூறும்போது, புதூா் நாட்டில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கைகள் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர மருத்துவ வசதிகள் ஏதும் இல்லை.
பணியில் இருக்கின்ற மருத்துவா்களும், செவிலியா்களும் அலட்சியப்போக்குடன் பணியாற்றி வருகின்றனா். திவ்யபாரதி உயிரிழப்புக்கு காரணமான மருத்துவா்கள், செவிலியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
திருப்பத்தூா் கிராமிய காவல் துறையினா் பேச்சு நடத்தியதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். பின்னா், திவ்யபாரதியின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.