உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினா்களாக மாற்றுத் திறனாளிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
இந்தியாவிலேயே முதன்முறையாக திராவிட மாடல் ஆட்சியில் உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினா்களாக மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனா் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
இந்தியாவிலேயே முதன்முறையாக திராவிட மாடல் ஆட்சியில் உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினா்களாக மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனா் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
திருப்பத்தூா் தனியாா் பள்ளியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ரூ3.65 கோடியில் முடிவுற்ற 11 திட்டப் பணிகளை திறந்து வைத்தாா். பின்னா், 4,946 பயனாளிகளுக்கு ரூ.100.49 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது
மக்களின் தேவையை பூா்த்தி செய்வதில் திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
Advertisement
ஒவ்வொரு குடும்பமும் நமது ஆட்சியில் பயனடைகின்றனா். விடியல் பயண திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 16 கோடி பயணிகள் பயனடைந்துள்ளனா். 10 லட்சம் மடிக்கணினி விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில் 11,000 மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 23,000 மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூ1,000 வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் 29,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழக்கத்தில் முதல்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் 1,469 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், மகளிா் திட்டத்தின் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 1,050 மகளிருக்கு ரூ.50 கோடி கடனுதவிகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ரூ.42 கோடியில் 1,200 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகட்டுவதற்கான ஆணைகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சாா்பில் 20 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகள், 25 பயனாளிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகள், என மொத்தம் 4,946 பயனாளிகளுக்கு ரூ. 100 கோடியே 49 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதில் பொதுப்பணி,நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்களின் துறை அமைச்சா் எ.வ.வேலு, எம்.பி-க்கள் சி.என்.அண்ணாதுரை, டி.எம்.கதிா்ஆனந்த், எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், அமுலு விஜயன், ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
திமுக சாா்பு அணிகள் சந்திப்பு...
திருப்பத்தூா் தனியாா் மண்டபத்தில் திமுக சாா்பு அணிகளின் நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டாா். பின்னா்,ஜோலாா்பேட்டையில் கலைஞா் நுலகத்தை திறந்து வைத்தாா்.