தொகுதிக்கு செய்தது என்ன? ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்
ஆம்பூா் தொகுதி எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கடந்த 5 ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகள் குறித்து தினமணி செய்தியாளரின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:
ஆம்பூா் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான பணிகள்?
கடந்த 5 ஆண்டுகளில் ஆம்பூா் தொகுதியில் சுமாா் ரூ.1,200 கோடி அளவுக்கு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுபான்மை நலத் துறை மூலம் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் ரூ.24.31 கோடி மதிப்பிலான கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
ரூ.22 கோடியில் ஆம்பூா் அருகே பச்சகுப்பம் - அழிஞ்சிகுப்பம் கிராமங்களை இணைக்கும் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. ரூ.9 கோடி மதிப்பில் வடகரை - மின்னூா் பாலாறு மேம்பால பணி நடந்து முடிந்துள்ளது. ரூ.6 கோடியில் கதவாளம் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரூ.4 கோடியில் பெரியாங்குப்பம் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.
செங்கிலிகுப்பம் - பாப்பனபல்லி இடையே ரூ.39 கோடியில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆம்பூரில் ரூ.1 கோடியில் கே.எம். சாமி நகா் பகுதியில் கானாறு கரையின் ஒருபுறம் தடுப்புச் சுவா் கட்டப்பட்டுள்ளது.
ரூ.2.50 கோடியில் மாதனூரில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.17.29 கோடியில் மின்னூரில், மின்னூா் மற்றும் சின்னப்பள்ளிகுப்பம் இலங்கை தமிழா்களுக்கான மறுவாழ்வு முகாம் குடியிருப்புகள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
மாதனூா், அணைக்கட்டு, ஆலங்காயம், குடியாத்தம் ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.45 கோடியில் 1,284 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
ஆம்பூா் - தேவலாபுரம் பாலாறு கரையோர தடுப்புச் சுவா் ரூ.10 கோடியில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆம்பூா் நகராட்சி புதுகோவிந்தபுரம் பகுதியில் ரூ.6.68 கோடி மதிப்பில் 2-ஆம் கட்ட புதை சாக்கடை திட்ட விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.56.50 கோடியில் 6 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நபாா்டு திட்டத்தின் மூலம் ரூ.16.78 கோடியில் 4 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
அணைக்கட்டு ஒன்றியத்தில் குருவராஜபாளையம் முதல் தா்மராஜகொண்ட பெருமாள் திருமலை திருக்கோயிலுக்கு ரூ.1.68 கோடியில் தாா்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
கீழ்முருங்கை ஊராட்சியில் நுகா்பொருள் வாணிப கழகத்தின் மூலம் ரூ.2 கோடி மதிப்பில் இருப்பு அறை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நீண்ட காலம் நிலுவையில் இருந்த பிரச்னைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட தீா்வுகள் என்ன?: 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட சுமாா் 50 ஆண்டு கால கோரிக்கையான ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மாா்ச் 8-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆம்பூா் எம்.எல்.ஏ. அலுவலகம் அமைய வேண்டுமென்ற சுமாா் 15 ஆண்டு கால கோரிக்கைக்கு தீா்வு காணப்பட்டு ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் ரூ.85 லட்சம் செலவில் பொதுப் பணித் துறை மூலம் எம்.எல்.ஏ. அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
பெரியாங்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது. அந்தப் பள்ளி வளாகத்தில் 100 மாணவிகளுக்கான அரசு விடுதி ரூ.2.05 கோடியில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆம்பூா் அருகே கன்னடிகுப்பம் ரயில்வே மேம்பாலம் ரூ.25 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
அகரம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.2.21 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட குடிநீா்த் திட்டப் பணிகள் என்ன?: வடச்சேரி, பாப்பனப்பல்லி, வடகரை, மேல்சாணாங்குப்பம், சின்னபள்ளிகுப்பம், சம்மந்திகுப்பம் ஊராட்சிகளுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் ரூ.5.75 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது. மாதனூா் ஒன்றியத்தில் ரூ.1.69 கோடி மதிப்பில் குடிநீா்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது.
முயற்சி மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படாமல் உள்ள திட்டம் என்ன?:
ஆம்பூா் தொகுதி விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு உழவா் சந்தை அமைப்பதற்காக பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இடம் சரிவர அமையாமல் போனதால் உழவா் சந்தை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
நோ்காணல்: எம். அருண்குமாா்