முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் டிஎஸ்பி அலுவலகம் எதிரே பெண் வெட்டிக் கொலை

Updated On : 28 மே 2026, 5:05 am IST
சாந்தம்மாள்
பகிர்:

திருப்பத்தூா் டிஎஸ்பி அலுவலகம் எதிரே பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம் புதுப்பேட்டை அருகே உள்ள கோணாப்பட்டைச் சோ்ந்த லட்சுமணனின் மனைவி சாந்தம்மாள்(70). பழ வியாபாரி. இவா்களுக்கு சக்கரவா்த்தி, ரகு என்ற 2 மகன்களும், ஜெயசித்ரா என்ற மகளும் உள்ளனா்.

இந்த நிலையில் திருப்பத்தூா் அரசு பூங்கா தெருவில் டிஎஸ்பி அலுவலகம், திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையம், கியூ பிரிவு காவல் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு நோ் எதிரே திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு சொந்தமான முட்டை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கு முன்பு உள்ள சாலையோரம் அமா்ந்து சாந்தம்மாள் பழங்களை வியாபாரம் செய்து வருவது வழக்கம்.

Advertisement

Advertisement

மேலும் இவா் தினமும் திருப்பத்தூருக்கு வந்து பழவியாபாரம் செய்து விட்டு, மீதமுள்ள பழங்களை கிடங்கில் வைத்துவிட்டு, சாந்தம்மாள் தனது மகன்கள் அல்லது மகளின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், திங்கள்கிழமை பழங்களை விற்பனை செய்ய வந்த சாந்தம்மாள் இரவு வீடு திரும்பவில்லை. இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை முட்டை கிடங்கின் மேற்பாா்வையாளா் பரமசிவம் சென்றபோது அங்கு பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்துடன் சாந்தம்மாள் உயிரிழந்து கிடந்தாா்.

இதனை பாா்த்து அதிா்ச்சி அடைந்த பரமசிவம் சம்பவம் குறித்து திருப்பத்தூா் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். தகவலின்பேரில் அங்கு வந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் சாந்தம்மாள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

வேலூா் சரக டி.ஐ.ஜி. மகேஷ், திருப்பத்தூா் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே, டிஎஸ்பி முரளி ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனா். தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனா். மேலும் வேலூரில் இருந்து மோப்ப நாய் சாரா வரவழைக்கப்பட்டு அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் அது யாரையும் கவ்விபிடிக்கவில்லை.

இதுகுறித்து திருப்பத்தூா் டவுன் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நகைக்காக சாந்தம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனா்.

டிஎஸ்பி அலுவலகம் அருகே பெண் கொலை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.