முகப்பு
திருவள்ளூர்

வேளாண் துறை செயல்பாடுகளை விவசாயிகள் அறிய "உழவன்' செயலி அறிமுகம்

வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விவசாயம் குறித்த தகவல்களை இருப்பிடங்களில் இருந்தே

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:34 AM
பகிர்:

வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விவசாயம் குறித்த தகவல்களை இருப்பிடங்களில் இருந்தே அறிந்து கொள்ளும் நோக்கத்தில் "உழவன்' என்ற செல்லிடப்பேசி செயலியை வேளாண் துறை அறிமுகம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, விளைநிலங்களில் சாகுபடி குறித்த தகவல்களை அறிந்துகொள்ள ஏற்கெனவே இணையதளம் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தேசிய அளவில் 70 லட்சம் விவசாயிகளின் விவரங்கள், பண்ணை மற்றும் விளைநிலத்தின் மண்வளம் ஆகியவை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பான ஆலோசனைகளும், வேளாண் இடுபொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில் வேளாண் துறையில் மின்னணு தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக இத்துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் தகவல்கள், இத்துறையில் என்னென்ன திட்டங்கள், எத்தனை பேருக்காக செயல்படுத்தப்படுகின்றன? என்ற விவரம், அதற்கான மானியம் எவ்வாறு பெறலாம், பயனாளிகள் தகுதி ஆகியவற்றைப் பற்றி விவசாயிகள்அறிந்து கொள்ளும் வகையில் "உழவன்' என்ற செல்லிடப்பேசி செயலி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஒருவருக்கே பலமுறை சென்றடைவதைத் தடுப்பதே இச்செயலியின் நோக்கமாகும். 
இதன் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான பயிர் இடுபொருள்கள், வேளாண்மைப் பொறியியல் இயந்திரங்கள், பசுமைக் குடில், நிழல் வலைக்குடில் போன்ற தோட்டக்கலை திட்டங்களைப் பெற முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பின் முன்னுரிமை எண், விவசாயியின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். அதேபோல், காப்பீடு செய்தோர் நிலபுல எண்ணை செல்லிடப்பேசியில் உள்ளீடு செய்தாலே இழப்பீடு குறித்த விவரங்களையும் அறியலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் சாகுபடி செய்வதற்கான உரம், விதை இருப்பு எங்குள்ளன என்பதையும் அறியலாம். அதோடு, 880 அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் 8,400 தனியார் நிறுவனங்களிடமிருந்தும் பயிர் மற்றும் ரக வாரியான விதை இருப்புத் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். 
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருள்களுக்கு உரிய விலை பெறும் வகையில் மாநில அளவில் உள்ள 277 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஏலத்தில் அந்தந்த தேதியில் விற்பனையான விளை பொருள்களின் நிகழ் நிலையையும் தெரிந்து கொள்ளலாம். அதற்கேற்ப தங்கள் விளைபொருள்களை கூடுதல் விலை கிடைக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்குக் கொண்டு சென்று பயன்பெறலாம். அதோடு, விவசாயிகள் தங்களது பகுதியில் அடுத்த 4 நாள்களுக்கான வானிலை நிலவரங்களும், மழை மற்றும் தட்பவெப்ப அடிப்படையில் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய பயிர்ச் சாகுபடி பற்றிய அறிவுரைகளும் வழங்கப்படும். 
இதுபோன்ற பல்வேறு சேவைகளை உள்ளடக்கிய "உழவன்' செல்லிடப்பேசி செயலியை கூகுள் உதவியுடன் விவசாயிகள் தங்களின் செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.