வாக்குக் கணிப்பு: உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல!
தேர்தல் வாக்குப் பதிவுகளுக்குப் பிந்தைய கணிப்புகளைப் பற்றி...
வாக்குப் பதிவுக்குப் பிந்தைய இந்தக் கருத்துக் கணிப்புகளை (இப்போது வாக்குக் கணிப்பு என்றும்) வைத்துக்கொண்டு சிலர் கொண்டாடிக் கொண்டும் சிலர் துக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த முடிவுகள் எல்லாம் இவ்வளவு பொருள்படுத்தக் கூடிய அளவுக்கு மதிப்புள்ளவைதானா? இவையொன்றும் நிஜமான முடிவுகள் அல்லவே? மே 4 ஆம் தேதி தெரியப் போவதுதானே தேர்தலின் முடிவுகள்?
வாக்குப் பதிவுக்குப் பிந்தைய இந்தக் கணிப்புகள் யாவும் நம்பக் கூடியதாக இருப்பதற்கான முதல் நிபந்தனையே, வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வருகிற ஒவ்வொருவரும் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் – இங்கேயே பல சாம்பிள்கள் காலியாகிவிடும்.
கணிப்பை வெளியிடும் முன் அல்லது வெளியிட்ட பின்னர், இந்தக் கணிப்பு, எவ்வளவு பேரிடம் எடுக்கப்பட்டது? எவ்வாறு எடுக்கப்பட்டது? தரவுகள் திரட்டப்பட்ட, தொகுக்கப்பட்ட விதம் பற்றிய வழிமுறை (மெதாடாலஜி) பற்றியும் தொடர்புடைய நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் (அது சரி, வச்சுக்கிட்டா வஞ்சகம் செய்யப் போறாங்க!).
Advertisement
பொதுவாக, ஆயிரங்களில், பத்தாயிரங்களில் என எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலான வாக்காளர்களிடம் தரவுகள் திரட்டப்படுகின்றனவோ அந்த அளவுக்கு விடைகளிலும் துல்லியம் கிடைக்கும்; கிட்டத்தட்ட இணையாக ஒரு மினி வாக்கெடுப்பு நடத்துவதைப் போலவே.
சாம்பிள்களை - வாக்காளர்களைத் தெரிவு செய்யும்போதே எந்தெந்த வயதிலுள்ள வாக்காளர்கள், மாநகர், நகர், சிறுநகர், கிராமம், குக்கிராமம் என எந்தெந்தப் பகுதி வாக்காளர்கள், என்னென்ன சாதி வாக்காளர்கள், கலந்துகட்டி பல்வேறுபட்ட தொழில்களைச் செய்வோர் என நிறையவும் பகுத்துத் தகவல்கள் கணிக்கப்பட்டிருக்க வேண்டும். தவிர, குறிப்பிட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் எல்லாம் வாக்குப் பதிவுகள் எந்தப் போக்கில் நடந்திருக்கின்றன என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
இதுவரை வெளிவந்த எத்தனையோ வாக்குக் கணிப்புகள் முழுவதுமாகப் பொய்த்துப் போயிருக்கின்றன. இத்தகைய கணிப்புகளை வெளியிடுவோரில் சிலர் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் காணாமல் போய்விடுவார்கள். அடுத்த தேர்தலுக்குதான் வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புக்கு வந்துசேருவார்கள்.
இங்கே எடுக்கப்படும் நம்முடைய கணிப்புகள் பெரும்பாலானவற்றில் மொத்தமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்காளர்களின் கருத்துகளைக் கேட்டு, அவர்கள் தெரிவிக்கிற பதில்களின் எண்ணிக்கைக்கேற்ப சதவிகிதத்தில் கூட்டணிகளுக்கு தொகுதிகளைப் பங்கிட்டுக் கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
எளிதாகச் சொல்லப் போனால், மாநிலம் முழுவதும் வெறும் 234 பேரிடம் மட்டுமேகூட கருத்துக் கேட்டு, ஒவ்வொரு கட்சிக்கும் ஆதரவாக எத்தனை பேர் சொல்கிறார்களோ அந்த எண்ணிக்கையைக் கட்சிக்கான இடங்களாகக்கூட அறிவிக்கலாம் என்பதைப் போல.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு செய்தியாளரை அழைத்துப் பேசி, யாருக்கு எத்தனை தொகுதிகள் எனக் கேட்டுக்கூட கருத்துக் கணிப்பை வெளியிடலாம்; வெளியிடப்படுகின்றன என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலங்காலமாகத் தப்புந்தவறுமாகக் கருத்துகளைக் கணிப்போரும் இருக்கிறார்கள். சிலருடைய விருப்பங்களை நிறைவேற்றவும் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறாக இந்தக் கணிப்புகளுக்குப் பின்னால், இன்னும் சொல்ல முடியாத, எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.
இதை வைத்துக் கொண்டுதான், உண்மையான தேர்தல் முடிவுகள் வரும் வரைக்கும் எல்லாருமாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம்; தொலைக்காட்சிகளில் விவாதிப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அஸ்ஸாமைப் பொருத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பின் கணிக்கப்பட்டுள்ளது. என்ன, கூடவே பிரபலமான மூன்று நிறுவனங்களும் தொகுதி எண்ணிக்கையை ஏறத்தாழ ஒரே மாதிரி, ஒரே அளவில் துல்லியமாகக் கணித்த அதிசயம் நடந்திருக்கிறது.
இந்தியா டுடே – தேசிய ஜனநாயகக் கூட்டணி: 85 - 95, காங்கிரஸ் கூட்டணி: 25 -32, மற்றவை: 6 – 12; என்டிடிவி – தேசிய ஜனநாயகக் கூட்டணி: 80 - 90, காங்கிரஸ் கூட்டணி: 23 – 33; டைம்ஸ் நவ் - தேசிய ஜனநாயகக் கூட்டணி: 88 - 101, காங்கிரஸ் கூட்டணி: 23 – 33. மே 4 ஆம் தேதிதான் உண்மை நிலவரமும், நிஜத்துக்கும் கணிப்புக்கும் எவ்வளவு தொலைவு என்பதும் தெரிய வரும்.
இந்தக் கணிப்பு முடிவுகள் எல்லாமும் சும்மா. 294 தொகுதிகளில் 226-க்கும் கூடுதலான தொகுதிகளில் வென்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று சவால் விட்டிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. இதுவரையிலும் வாக்குக் கணிப்புகளை மீறிதான் திரிணமூல் ஆட்சிக்கு வந்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
களத்தில் உண்மை நிலவரத்தை மக்கள் அனைவரும் அறிந்திருக்கும்போது, திடீரென சம்பந்தமில்லாமல் ஒரு குறிப்பிட்ட கட்சி அபரிமிதமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், ஆட்சி அமைக்கும் என்றும் கணிப்புகளில் தெரிவிக்கும்போது எவ்வாறு நம்புவது, யாரை நம்புவது?
ஆக, இந்தக் கணிப்புகள் எல்லாம் எவ்வாறு திரட்டப்பட்டன என்பதும் இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இவற்றின் பின்னுள்ள தர்க்க அறிவியல் பற்றியும் வெளிப்படையாகத் தெரிவிக்காத வரையில் கணிப்புகள் எல்லாமும் பெரும்பாலான தருணங்களில் ரசிப்பதற்குரிய நகைச்சுவைகளாகத்தான் இருக்கும்.
எல்லா கணிப்புகளும் நகைச்சுவைகள்தானா? அல்ல, அவ்வாறு ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் ஒதுக்கிவிடவும் முடியாது; கூடாது. முறையாகத் திட்டமிடப்பட்டு, பரந்துபட்ட அளவில் வாக்காளர்கள் தெரிவு செய்யப்பட்டு, தொழில்முறை கணிப்பாளர்களைக் கொண்டு, மிக அதிக அளவிலான பேரிடம் கருத்துகளைப் பெற்றுத் தரவுகளைத் தர்க்க ரீதியாக ஆய்வு செய்து முடிவுக்கு வந்திருந்தால் ஓரளவுக்கு (அப்போதும் ஓரளவுதான், துல்லியம் அல்ல) கணிப்புகள் சரியாகவும் இருக்கும்.
இல்லாவிட்டால் தேர்தல் காலத்தில் வாக்குப் பதிவு முடிந்ததும் குறிப்பிட்ட நேரத்தில் – தொடர்ந்து சில மணி நேரங்களுக்குச் செய்தித் தொலைக்காட்சிகளில் - டி.ஆர்.பி. எகிற வைப்பதற்கான சிறந்த காரணிகளில் ஒன்றாக மட்டுமே கணிப்புகள் திகழும்.
மற்றபடி, ஒவ்வொரு தேர்தலின்போதும், கருத்துக் (வாக்குக்) கணிப்புகளை ஒரு நாள் கூத்தாக, பொழுதுபோக்காக எடுத்துக்கொண்டு ரசித்துக் களிக்கலாம் – இந்த சீசனில், மே 4 மக்கள் தீர்ப்பு என்னவென்று உறுதியாக அறிவிக்கப்படும் வரை!