வாடகையை உயர்த்த வலியுறுத்தி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
அத்திப்பட்டு புதுநகரில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்கள் டேங்கர் லாரிகளின் வாடகையை உயர்த்தித் தர வலியுறுத்தி லாரி
அத்திப்பட்டு புதுநகரில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்கள் டேங்கர் லாரிகளின் வாடகையை உயர்த்தித் தர வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி வட்டத்தில் உள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் 3 பெட்ரோலிய நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றி, சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகள், ஆந்திர மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் ஆகிய இடங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.
இந்நிலையில், டீசல் விலை உயர்ந்து வருவதன் காரணமாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் நீண்ட நாள்களாக தங்களுக்கு வாடகை கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும் என பெட்ரோலிய நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை பெட்ரோலிய நிறுவனங்கள் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, லாரி வாடகையை உயர்த்தி தர வலியுறுத்தி, இங்குள்ள இந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் பெட்ரோல் ஏற்றாமல், லாரிகளையும் இயக்காமல், லாரிகளின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் காரணமாக பெட்ரோல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.