6 பேர் மட்டுமே பிளஸ் 2 பயிலும் பள்ளிக்கு தேர்வு மைய அனுமதி: சமூக ஆர்வலர்கள் புகார்
திருவள்ளூர் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவர்கள் படிக்கும் அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கு தேர்வு மைய அனுமதி வழங்காமல், 6 பேர் மட்டும் பிளஸ் 2 பயிலும் தனியார் பள்ளியில்
திருவள்ளூர் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவர்கள் படிக்கும் அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கு தேர்வு மைய அனுமதி வழங்காமல், 6 பேர் மட்டும் பிளஸ் 2 பயிலும் தனியார் பள்ளியில் தேர்வு மையம் அமைத்துள்ளதால் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் வியாழக்கிழமை (மார்ச் 1)தொடங்கின. திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வு எழுதுவதற்காக 113 தேர்வு மையங்கள் அமைத்து தேர்வு நடைபெற்றது.
இதில் பிளஸ் 2 தேர்வு மையம் அமைப்பதற்கு குறைந்தது 100 மாணவர்கள் வரை பயிலும் பள்ளிக்கு மட்டுமே பள்ளிக் கல்வித்துறை தேர்வு மையத்திற்கான அனுமதி வழங்குவது என்பது விதிமுறையாகும்.
இதனால் குறைவான எண்ணிக்கை உடைய மாணவர்கள் அருகிலுள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், போளிவாக்கம் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 6 மாணவர்கள் மட்டுமே பிளஸ் 2 பயின்று வருகின்றனர். (இப்பள்ளி முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது).
இந்த 6 மாணவர்களுக்காக விதிமுறைகளை மீறி இப்பள்ளியை தேர்வு மையமாக்கிஅனுமதி அளித்திருப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இம்மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 50 முதல் 80 மாணவர்களுக்கும் மேல் பயிலும் பள்ளிக்குக் கூட தேர்வு மையத்துக்கான அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், 6 மாணவர்கள் மட்டுமே பயிலும் பள்ளிக்கு தேர்வு மையம் அமைக்க அனுமதி அளித்துள்ளனர் என்பது கண்டித்தக்கது. மேலும், இத்தேர்வு மையத்திற்காக வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கொண்டு வருவதற்கான ஊழியர்கள், பாதுகாப்புக்காக 2 காவலர்கள் , தேர்வு மையத்தைப் பார்வையிட அதிகாரிகள் நியமனம் என மனித உழைப்பையும், காலத்தையும் விரயம் செய்கின்றனர்.
அதோடு, குறைந்த அளவிலேயே மாணவர்கள் தேர்வு எழுதுவதால் சோதனைக்கு அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் முன்வரமாட்டார்கள்.
இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அதனால், இப்பள்ளிக்கு அளிக்கப்பட்டுள்ள தேர்வு மைய அனுமதி குறித்து ஆய்வு செய்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.