திருவள்ளூர்

பனப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

DIN


திருவள்ளூர் அருகே பனப்பாக்கம் ஏரியிலுள்ள 60 ஏக்கர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள  ஏரி, குளங்களில் மழை நீரைத் தேக்கி வைக்கும் வகையில், விவசாயிகள் பங்களிப்புடன் தூர்வாரி ஆழப்படுத்தும் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ. 11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குடிமராமத்துப்பணிகளை அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள பனப்பாக்கம் ஏரியில் தொடங்கி வைத்தார். 
தூர்வாரும் பணிக்காக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.29 லட்சமும், விவசாயிகளின் பங்களிப்புத் தொகையாக ரூ.1 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.30 லட்சம் செலவில் இந்த ஏரியில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  
 இந்த ஏரி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததால் ஏரியைச் சுற்றியுள்ள நீர்த்தேக்கப் பகுதிகளை பலரும் ஆக்கிரமித்து கொண்டனர். இதன் காரணமாக  160 ஏக்கர் பரப்பளவில், விரிந்து, பரந்து கிடந்த இந்த ஏரி தற்போது 86 ஏக்கராக சுருங்கி விட்டது.  இந்த ஏரியே இப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீரைப் பெருக்கும் முக்கிய காரணியாக திகழ்கிறது.  மேலும், இந்த ஏரி நீரைக் கொண்டு சுமார்  400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 
இந்நிலையில், 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை, 20-க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, சுற்றிலும் நெல் நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 60 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து பாசனம் செய்து வருகின்றனர். மீதமுள்ள இடத்தில் கட்டடங்கள் கட்டியும், அவற்றை வாடகைக்கு விட்டும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். 
எனவே,  ஆக்கிரமிப்பு நிலங்களையும் மீட்டு ஏரியுடன் சேர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.    
 இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வனராஜ் கூறுகையில், இந்த ஏரியை நம்பியே நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர். ஏரியில் மழைநீர் தேங்கும்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால், இதை நம்பியே கிணற்று பாசனம் நடைபெறுகிறது. ஏரியின் ஆக்கிரமிப்பு காரணமாக கிணற்றின் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. 
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பலமுறை கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் குடிமராத்துப் பணிகளை தொடங்கியுள்ளனர். 
எனவே, முதலில் இந்த ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக்கு சொந்தமான நிலத்தை முழுமையாக மீட்க பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.   
இதுகுறித்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) பொறியாளர் ஒருவர் கூறுகையில், இந்த ஏரி தூர்வாரி 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. 
ஏரியைச் சுற்றிலும் ஆக்கிரமிப்பாளர்களால் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அவர்களே முன்வந்து நேரடியாக அகற்றிக் கொள்ளுமாறு கூறியதுடன், ஆட்சியர் உத்தரவின் பேரில் நோட்டீஸும் விநியோகிக்கப்பட்டுள்ளது. 
 விரைவில் ஏரியின் ஆக்கிரமிப்பு பகுதிகளை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் நில அளவை செய்து எல்லைக்கல் நடப்படும். மேலும், ஏரிக்கு சொந்தமான இடம் என்பதை குறிப்பிடும் வகையில் தகவல் பலகையும் வைக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

2.5 கி.மீ. நீளத்துக்கு கரையை  பலப்படுத்த திட்டம் 
பனப்பாக்கம் ஏரியில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பொதுப்பணித்துறையினர், 2,556 மீட்டர் நீளத்துக்கு ஏரியின் கரை பலப்படுத்தப்பட உள்ளது. 
அதேபோல, 3 மதகுகள், ஒரு கழுங்கு போன்றவற்றில் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், 2,100 மீட்டர் நீளத்துக்கு நீர் வரத்துக் கால்வாயை  தூர்வாரவும், பாசனக் கால்வாயை 10 மீட்டர் ஆழப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT