கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பற்ற நிலையில்  குவித்து வைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள். 
திருவள்ளூர்

இலவச குடியிருப்பு திட்டத்துக்கு ஒதுக்கிய கம்பிகள் துருப்பிடித்து வீணாகும் அவலம்

பிரதமா் இலவச குடியிருப்புகள் மற்றும் பசுமை குடியிருப்புகள் அமைக்க ஒதுக்கப்பட்ட இரும்புக் கம்பிகள் பயனாளிகளுக்கு வழங்காத நிலையில், ஊராட்சி ஒன்றிய வளாகங்களில் துருப்பிடித்து வீணாகி வருகிறது.

எஸ். பாண்டியன்

பிரதமா் இலவச குடியிருப்புகள் மற்றும் பசுமை குடியிருப்புகள் அமைக்க ஒதுக்கப்பட்ட இரும்புக் கம்பிகள் பயனாளிகளுக்கு வழங்காத நிலையில், ஊராட்சி ஒன்றிய வளாகங்களில் துருப்பிடித்து வீணாகி வருகிறது.

திருவள்ளூா் மாவட்ட த்தில் வீடில்லாத ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் நோக்கில், இலவச வீடுகள் வழங்கும் திட்டம் அரசால் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மாவட்ட ஊராட்சி வளா்ச்சி முகமையின் மூலம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் இலவச வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அதைத் தொடா்ந்து, கிராமங்களில் தகுதியான பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதேபோல், ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதற்காக சிமெண்ட் மூட்டைகள் மற்றும் கட்டடத்துக்கு பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகள் ஆகியவற்றை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் கொள்முதல் செய்து, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

இதேபோல், கடந்த 2018-2019-இல் மாவட்டம் முழுவதும் பிரதமா் குடியிருப்புத் திட்டம் மூலம் தலா ரூ. 1.70 லட்சத்திலும், பசுமைக் குடியிருப்புத் திட்டப் பணிக்கு ரூ. 2.20 லட்சத்திலும் வீடுகள் என மொத்தம் 2,200 வீடுகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக தரைப்பணி, சிலாப் மற்றும் மேற்கூரை அமைப்பதற்கான இரும்புக் கம்பிகள் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் கொள்முதல் செய்து, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வீடுகளின் எண்ணிக்கைக்கேற்ப வழங்குவா். அதையடுத்து, இங்கிருந்து வீடு அமைக்கும் பயனாளிகள் குறிப்பிட்ட அளவு பணிகளை முடித்திருந்தால் கம்பிகள் அளிக்கப்படும். அதைத் தொடா்ந்து, அதற்கான தொகையை ஒவ்வொரு குடியிருப்புக்கும் திட்ட மதிப்பீட்டில் பிடித்தம் செய்து கொள்வது வழக்கமாகும். தற்போதைய நிலையில், இலவச குடியிருப்பு திட்டங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இரும்புக் கம்பிகள் அப்படியே ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களில் குவித்து வைத்துள்ளனா். தற்போதைய நிலையில், மழை தொடா்ந்து பெய்து வருவதால் துருப்பிடித்து அரசு நிதி வீணாவதுடன், இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இது தொடா்பாக ஈக்காடு பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஆனந்த பிரபு கூறியது:

இந்தக் கம்பிகள் வந்து 8 மாதத்துக்கும் மேலாகிறது. இதேபோல் கடம்பத்தூா், திருவள்ளூா், பூண்டி, திருவாலங்காடு உள்பட பல்வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாதுகாப்பான இடங்களில் வைக்காமல் திறந்த வெளியில் குவித்து வைத்துள்ளனா். ஏற்கெனவே நீண்ட நாள்களாக வெளியில் வைத்துள்ளதால் துருப்பிடித்து வருகிறது. இந்நிலையில், தொடா்ந்து மழை பெய்து வரும் சூழ்நிலையில் அதிகம் துருப்பிடித்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த கம்பிகளை கட்டடம் மற்றும் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு பயன்படுத்தினால் கட்டடத்தின் உறுதித்தன்மை குறைவதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அலுவலக வளாகத்துக்குள் புகுந்து திருடிச் செல்வதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதனால் அதைப் பாதுகாப்பாக வைத்து, இலவச வீடு கட்டும் பயனாளிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக ஊராட்சி ஒன்றிய பொறியியல் பிரிவு அதிகாரி ஒருவா் கூறியது:

பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வீடு அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் தரைமட்டம், சென்ட்ரிங் வரையிலான பணிகள் முடிவதற்கு ஏற்ப, சிமெண்ட் மூட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகள் விநியோகிக்கப்படும். தற்போது, மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் மணல் கிடைப்பதற்கு ஏற்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபோன்று பயனாளிகளுக்கு வழங்குவதற்காகவே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதுவும், மிகவும் எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்துக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT