திருவள்ளூர் அருகே உள்ள பட்டரைப்பெரும்புதூரில் கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை அமைத்து, அந்த நீரை குழாய்கள் மூலம் வீரராகவர் கோயில் தெப்பக் குளத்துக்கு கொண்டு வரும் திட்டப் பணியை மீண்டும் தொடர வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் அரசுக்கு முன் வைத்துள்ளனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் மாதம்தோறும் அமாவாசை தினத்தன்று வந்து செல்கின்றனர்.
கோயில் குளம்: இக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தெப்பக் குளத்தில் நீராடினால் தீராத நோய்கள் அனைத்தும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்குளம் 4 பகுதிகளிலும் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நகரின் மையப் பகுதியில் இக்குளம் அமைந்துள்ளதால் நிலத்தடி நீராதாரமாகவும் விளங்குகிறது.
குளத்தின் மையப்பகுதி 4 மூலைகளைக் கொண்டதாகவும், அதன் மேற்பரப்பு 9 மூலைகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இதனால் இக்குளத்தில் நீர் நிரம்பினால் ஏரி போல் காட்சி தரும். அத்துடன் சுற்றுப் பகுதிகளில் 3 கி.மீ. சுற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
நீர்வழித் தடம் அடைப்பு: இக்குளத்துக்கான நீர்வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளால் அடைபட்டுள்ளன. இதனால் குளத்துக்கு தண்ணீர் வரத்து நின்று போனது. இந்நிலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வருவோருக்கு தண்ணீர் தேவையைக் கருத்தில்கொண்டு, கோயில் நிர்வாகம் குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் சிறிய குளம் ஒன்றை அமைத்து நீர் நிரப்ப ஏற்பாடு செய்துள்ளது.
தடுப்பணை: குளத்துக்கு மழைக்காலத்தில் நீரைக் கொண்டு வரும் வகையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து, ராட்தச குழாய்கள் பதித்து, தண்ணீர் கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் இணைந்து முயற்சி
மேற்கொண்டன. இத்திட்டப் பணியை ரூ. 25 கோடி செலவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
கிடப்பில் போடப்பட்ட திட்டப் பணி: அதைத் தொடர்ந்து பட்டரைப்பெரும்புதூர் அருகே 25 மீட்டர் நீளம் கொண்ட தடுப்பணை ரூ. 6 கோடியில் அமைக்கப்பட்டது. தடுப்பணைக்கான பணிகள் முடிந்த நிலையில், குழாய் பதிக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தகவல்: இதுதொடர்பாக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் கூறியது:
பூண்டி ஏரிக்கு வரும் நீர் பட்டரைப்பெரும்புதூர் வரை தேங்கியுள்ளது. இங்கு கட்டப்படும் தடுப்பணை, ஏரியின் முழுக் கொள்ளளவு உயரத்தைக் காட்டிலும் சற்று அதிகமாக இருக்கும். இதனால் மழைக் காலத்தில், ஏரிக்கு வரும் தண்ணீர் முழுக் கொள்ளளவை தாண்டும்போது தடுப்பணையில் நீர் சேகரிக்கப்படும். அந்த நீரை 8 கி.மீ. தூரத்தில் உள்ள வீரராகவர் கோயில் குளத்துக்கு குழாய்கள் மூலம் கொண்டு வர திட்டமிடப்பட்டது. தற்போது தடுப்பணை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
முதலில் சிறுகால்வாய் மூலம் நீரைக் கொண்டு வர திட்டமிடப்பட்டது. அது சாத்தியமில்லை என்பதால், ராட்சதக் குழாய் மூலம் நீரைக் கொண்டு செல்ல திட்டமிட்டு வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும்.
திட்டப் பணி நிறைவடைந்தால், கோயில் குளத்தில் 80 டிஎம்சி நீரை தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் குளத்தைச் சுற்றிலும் 4 கி.மீ. சுற்றளவில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.