முகப்பு
திருவள்ளூர்

மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாலங்காடு பகுதியில்  குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தலைகீழாக நின்றும், குளித்தும்

Updated On : 24 ஜனவரி 2019, 12:35 am IST
பகிர்:

திருவாலங்காடு பகுதியில்  குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தலைகீழாக நின்றும், குளித்தும்  மலைவாழ் மக்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.குமாரவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் தமிழரசு முன்னிலை வகித்தார். இதில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் இ.மோகனா கலந்து கொண்டார். இதில் வீரராகவபுரம் கிராம ஊராட்சியில் உள்ள புளியங்கொண்டா இருளர் காலனி மக்களுக்கு மேல்நிலைத் தொட்டி அமைத்து தெருக்குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவேண்டும், சாலை வசதி மற்றும் தெருவிளக்கு வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும். திருத்தணி அருகே காஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இருளர் மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 
அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தலைகீழாக நின்றும், குளித்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதைத் தொடர்ந்து இக்கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.