திருவள்ளூர்

ஆட்சியர் அலுவலகத்தில் பொலிவிழந்து காணப்படும் பூங்கா: சீரமைக்கக் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூங்கா பொலிவிழந்து காணப்படுவதோடு

எஸ். பாண்டியன்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூங்கா பொலிவிழந்து காணப்படுவதோடு, அங்குள்ள நடைபயிற்சிக்கான மேம்பாலம் மண் அரித்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதைச் சீரமைக்கவும், மழைநீர் சேகரிப்புக் குளத்தைத் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் குடிநீர் பிரச்னை, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக கோரிக்கை மனு அளிக்க பெண்கள், வயதானவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருவோர் வெயியில் இளைப்பாற இங்குள்ள பூங்காவைப் பயன்படுத்தி வருகின்றனர். 
வசதிகள்: ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்புறம் மழைநீர் சேகரிப்புக் குளத்தைச் சுற்றி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளன. இங்கு குழந்தைகளுக்கான ஊஞ்சல், குடை வட்ட ராட்டினம், ஏற்றம், இறக்கத்துடன் அமர்ந்து விளையாடும் சாதனம், உயரத்திலிருந்து சறுக்கி விளையாடும் சாதனம், குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் அமருவதற்கான இருக்கைகள் ஆகியவை அமைந்துள்ளன. நாள்தோறும்  பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வகையில் நடைபாதை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
வீணாகும் விளையாட்டு சாதனங்கள்: பசுமையாக காணப்படும் இந்தப் பூங்காவுக்கு முதியோர், இளைஞர்கள் உள்ளிட்டோர் காலை நேரங்களில் வந்து நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் குழுவாக  இங்கு வந்து படிக்கின்றனர். இங்குள்ள குழந்தைகள் விளையாடும் சாதனங்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. அவற்றைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
திறந்தவெளியில் மின்சாதனங்கள்: பூங்காவுக்கு குழந்தைகள் அதிக அளவில் வந்து விளையாட்டு சாதனங்களில் விளையாடுகின்றனர். இங்கு மின்சாதனங்கள் திறந்தவெளியில் உள்ளன. குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அந்த மின்சாதனங்களை பாதுகாப்பாக வைக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.           
குவிந்துள்ள குப்பைகள்:  பொதுமக்கள் அதிக அளவில் கூடம் இடமாக பூங்கா இருப்பதால் அவர்கள் வீசியெறியும் உணவுக் கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற குப்பைகள் இங்கு குவிந்துள்ளன. இங்கு குப்பைகளை சேகரிப்பதற்கு ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை இங்குள்ள மழைநீர் சேகரிப்பு குளத்திற்குள் சமூக விரோதிகள் போட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மழைநீர் சேகரிப்பு குளம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 
குளத்தில் கிடக்கும் நெகிழிக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர். இக்குளத்தில் மழைக்காலத்தில் பெய்யும் மழைநீரை சேமித்து வைப்பதன் காரணமாக ஆட்சியர் அலுவலகத்துக்குத் தேவையான தண்ணீர் சிரமமின்றி கிடைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 
நிரந்தர நடவடிக்கை தேவை: இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஜெயபாஸ்கரன் என்பவர் கூறியது: 
ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவோர் பயன்படுத்தும் இடமாக பூங்கா உள்ளது. இங்குள்ள குளத்தைக் கடப்பதற்கு அமைக்கப்பட்ட நடைபாதை பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பாலத்தின் தடுப்புகள் உடைந்தும், குளக்கரையில் பதிக்கப்பட்ட கற்கள் பெயர்ந்தும் மண் அரிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதை சரிசெய்ய தற்காலிக நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படுகிறது.
மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் நிழல் தரும் மரக்கன்றுகளை இங்கு அடர்த்தியாக நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலாவது தற்காலிகமாக பணிகள் மேற்கொள்வதற்குப் பதிலாக, நிரந்தரமாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். 
நடவடிக்கை: இது குறித்து ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கூறுகையில், "திருவள்ளூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து, ஏரிகளும், குளங்களும் தனியார் பங்களிப்புடன் தூர்வாரப்பட்டு வருகின்றன. அதேபோல் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் காலியிடங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பசுமை நிழல் பரப்பும் வகையில் அடர் மரக்கன்றுகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் ஆட்சியர் அலுவலகப் பூங்காவில் நடைபாதை மற்றும் குளத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT