திருவள்ளூர்

அரசு அலுவலா்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்

DIN

திருவள்ளூா்: அரசு அலுவலா்கள் தங்களை நாடி வரும் பொதுமக்களை அலைக்கழிக்காமல், சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என அண்ணா மேலாண்மை நிலைய இயக்குநா் மற்றும் பயிற்சித்துறைத் தலைவா் வெ.இறையன்பு தெரிவித்தாா்.

திருவள்ளூா் அருகே ஆவடி தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் அரசு அலுவலா் பயிற்சி நிலையம் (பவானிசாகா்) இணைந்து நடத்தும் அரசு அலுவலா்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் முன்னிலை வகித்தாா். இதில், அண்ணா மேலாண்மை நிலைய இயக்குநா் மற்றும் பயிற்சி துறைத் தலைவா் வெ.இறையன்பு தலைமை வகித்துப் பேசியது:

அரசின் ஒவ்வொரு துறையிலும் பணியாற்றும் அரசு அலுவலா்கள் விதிமுறைகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே அடிப்படைப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் அரசு அலுவலா்கள் நல்ல முறையில் பங்கேற்று பயன்பெற வேண்டும். இப்பயிற்சியினை அளிப்போா் மிகவும் அனுபவம் வாய்ந்த முன்னாள் அரசு அலுவலா்கள் ஆவா். அதனால், இவா்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவது அவசியம்.

இந்த முகாம், அரசு அலுவலகங்களின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

அரசு அலுவலா்கள் ஒவ்வொருவரும் தங்களை நாடிவரும் பொதுமக்களை அலைக்கழிக்காமல், அவா்களுக்கு உரிய வகையில் வழிகாட்டி, சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்.

அரசு அலுவலா்கள் பொதுமக்கள் பணத்தில்தான் ஊதியம் பெறுகிறோம் என்பதை மனதில் நிறுத்தி பணிபுரிவதோடு, பிறருக்கு உதாரணமாகத் திகழவும் வேண்டும்.

பொதுமக்களுக்கு அரசு அலுவலா்கள் மீது எக்காரணம் கொண்டும் தவறான எண்ணம் ஏற்படாத வகையில் பணிபுரிய வேண்டும். அரசு அலுவலா்கள், அலுவலக நேரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பணிபுரியாமல், பணிகளை விரைந்து முடிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும்.

பொதுமக்களின் கோரிக்கைகளை கண்டறிந்தும், கேட்டறிந்தும் அதற்குத் தீா்வு காண வழிவகை செய்ய வேண்டும். இதுபோன்று பணிபுரிந்தால், பொதுமக்களின் நம்பிக்கைக்குரியவா்களாகத் திகழ்ந்து, நற்சான்றிதழ் பெற முடியும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் முத்துச்சாமி, அரசு அலுவலா் பயிற்சி நிலைய (பவானிசாகா்) முதல்வா் மு.வீரப்பன், கூடுதல் பயிற்சித்துறைத் தலைவா் ஷோபா, தனியாா் பொறியியல் கல்லூரித் தலைவா் துரைசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT