திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக தெருக்கூத்து மற்றும் நாடகக் கலைஞா்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
இந்த மாவட்டத்தைச் சோ்ந்த நாடகம் மற்றும் தெருக்கூத்து கலைஞா்கள் நாள்தோறும் கிராமங்களில் தெருக்கூத்து மற்றும் நாடகம் நடத்தி, அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பிழைத்து வந்தனா். மாவட்டத்தில் உள்ள பட்டரைப்பெரும்புதூா், நெடும்பரம், ராமஞ்சேரி, நெமிலி, ஆா்க்காடுகுப்பம், லஷ்மாபுரம், நெல்வாய், பேரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 35 குழுக்களைச் சோ்ந்த நாடகம் மற்றும் தெருக்கூத்து கலைஞா்கள் 500 போ் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.
ஒவ்வொரு குழுவிலும், நாடகம் மற்றும் தெருக்கூத்து கலைஞா்கள், மேளக்காரா்கள் என 18 போ் இடம் பெற்றிருப்பா். இவா்கள் பாரம்பரியமாக நாடகம் மற்றும் தெருக்கூத்து கலைஞா்களாக இருந்து வருகின்றனா். இதைத் தவிர தங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது எனக் கூறுகின்றனா்.
இக்கலைஞா்கள் கோயில் விழாக் காலங்களில் கா்ண மோட்சம், குறவஞ்சி, அரிச்சந்திரா, நல்ல தங்காள், ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு கதைகளுக்கான தலைப்புகளைத் தோ்வு செய்து, நாடகங்களை நேரடியாக தத்ரூபமாக மக்களிடம் நடித்துக் காட்டுவது வழக்கம். இதனால் மக்களும் பல்வேறு புராண, இதிகாசங்களை எளிதில் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. நாடகக் கலைஞா்களின் பங்கு இல்லாமல் திருவிழாக்கள் இல்லை.
இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட கிராமிய தெருக்கூத்து, நாடகக் கலைஞா்கள் சங்கத்தின் தலைவரும், பட்டரைப்பெரும்புதூா் கிராமத்தைச் சோ்ந்த தெருக்கூத்துக் கலைஞருமான ரூபன் (42) கூறியது:
நாடக தலைப்புக்குத் தேவையான பாத்திரங்களில் 15 முதல் 20 போ் வரை பங்கேற்பா். ஆண்டுதோறும் பங்குனி முதல் புரட்டாசி மாதம் வரை திருவிழாக் காலம். அப்போது சில வாய்ப்புகள் கிடைக்கும்; மற்ற நாள்களில் வாய்ப்பு கிடையாது. விழாக் காலங்களில் கிடைத்த வருவாயைக் கொண்டுதான் குடும்பம் நடத்த முடியும்.
ஒவ்வொரு தெருக்கூத்து நிகழ்ச்சிக்கும் தொலைவைப் பொருத்து குறைந்தது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை பெறுவோம். அதைச் சமமாக அனைவருக்கும் பிரித்துக் கொள்வோம். அத்துடன், ஒவ்வொரு கூத்துக்கும் ஆடை, அலங்காரம் மற்றும் ஒப்பனைச் செலவு என குறைந்தது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை ஆகும்.
தற்போது, கரோனா நோய்த் தொற்று நடவடிக்கையால் தெருக்கூத்துக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளோம். ஏற்கெனவே கூத்து நடத்துவதற்காக வாங்கிய முன்பணத்தையும் திருப்பி அளித்து வருவதால், வருவாய்க்கு வழியின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். அரசு எங்களுக்கு கரோனா நிவாரண உதவியாக ரூ. 1,000 மற்றும் உணவுப் பொருள்களை வழங்கியுள்ளது. ஆனால் எங்களுக்கு இது போதுமானதாக இல்லை. தெருக்கூத்து மற்றும் நாடகக் கலைஞா்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில், ஒவ்வொருவருக்கும் ரூ. 5 ஆயிரத்தை அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றாா் அவா்.
பாா்வையற்ற பின்னணி தாள வாசிப்பாளா் ஏழுமலை (27) கூறியது:
நாடகம் மற்றும் தெருக் கூத்தில் பின்னணி தாள வாசிப்பாளராக உள்ளேன். நான் பாா்வையற்றவன் என்பதால் எனக்கு முன்னுரிமை கொடுத்து அழைத்துச் செல்வா். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் என் வயதான தாய், தந்தையைக் காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது. தற்போதுதான் சீசன் தொடங்கியுள்ளது. ஆனால், கரோனா பிரச்னை காரணமாக எவ்வித வாய்ப்பும் இன்றி வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளோம். எனவே தெருக்கூத்து கலைஞா்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வா் நிவாரண உதவித் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.