ஊத்துக்கோட்டை அருகே சாலையில் குப்பைக் கழிவுகள் தேங்கும் அவலம்
ஊத்துக்கோட்டை அருகே திடக்கழிவு மேலாண்மை அலட்சியத்தால் சாலையிலும், நீர்நிலையிலும் குப்பைக்கழிவுகள் தேங்கும் அவலம் நடந்துள்ளது.
ஊத்துக்கோட்டை அருகே திடக்கழிவு மேலாண்மை அலட்சியத்தால் சாலையிலும், நீர்நிலையிலும் குப்பைக்கழிவுகள் தேங்கும் அவலம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஆரணி பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது.இங்கு சுமார் 20 ஆயிரம் மக்கள் வசித்து வரும் நிலையில் 15 வார்டுகளிலும் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் மூலமாக 5 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, பெரியபாளையம் சாலையில் ஆரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் சேகரிக்கத்து வைக்கப்படுகிறது.
வீடுகள், கடைகளில் இருந்து சேகரித்து வரும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகள் தனியாகவும் பிரித்து வைக்கப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதனால் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை மைய சுற்றுச்சுவரை தாண்டி பெரியபாளையம் செல்லும் சாலையில் பரவி கிடக்கிறது.
இதனால் நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குப்பையில் இருந்து வரும் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் ஆரணியாறு மற்றும் ஏரி சந்திக்கும் கால்வாயிலும் குப்பைக்கழிவுகள் தேங்குவதால் நிலத்தடிநீர் மாசடையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் இருந்து வருகின்றனர்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு திடக்கழிவு மேலாண்மை மையம் முறையாக செயல்பட்டு சாலையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி, ஆறு, ஏரி கால்வாயில் உள்ள குப்பைகளையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். தவறும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடவும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.