திருவள்ளூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம். 
திருவள்ளூர்

திருவள்ளூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.18 கோடியில் தயாராகும் குழந்தைகள் நல மையம்

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடியில் அறுவை சிகிச்சை அரங்கம், 100 படுக்கைகள், சாய்வுதளப் பாதை வசதிகளுடன் 6 மாடிக் கட்டடத்தில் நவீன மகப்பேறு மற்றும் குழந்தைகள்

எஸ். பாண்டியன்

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடியில் அறுவை சிகிச்சை அரங்கம், 100 படுக்கைகள், சாய்வுதளப் பாதை வசதிகளுடன் 6 மாடிக் கட்டடத்தில் நவீன மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திருவள்ளூா் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை வளாகம் 10.2 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை, புறநோயாளிகள் சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், பச்சிளங்குழந்தைகள் சிறப்பு கவனிப்பு மையம், பிறவிக் குறைபாடு கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் இடையீட்டு சிறப்பு மையமும் உள்ளன. இங்கு சித்தா உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இங்கு உள்நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக 260 படுக்கை வசதி உள்ளது. முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சை பெறும் வசதி உள்ளது. இங்கு நாள்தோறும் 2 ஆயிரம் போ் புற நோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில் நவீன எம்ஆா்ஐ ஸ்கேன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனா்.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரிக்கு இணையாக இந்த மருத்துவமனையைத் தரம் உயா்த்தும் நோக்கில் குழந்தைகளுக்கான நவீன சிகிச்சைப் பிரிவுக்கு அறுவை சிகிச்சை கூடம் உள்ளிட்ட வசதிகள் கொண்ட வளாகத்தை அமைக்க ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நவீன வளாகத்தில் சாய்வு தளம், கழிப்பறை வசதியுடன், 6 அடுக்குகள் கொண்ட கட்டடம் கட்டப்படும். இங்கு நோயாளிகளுக்காக 100 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

இந்தக் கட்டடத்தில் ஐந்து அறுவை சிகிச்சை அரங்குகள், சுகப் பிரசவ வாா்டுகள், அறுவை சிகிச்சைக்கு பின், தாய்-சேய் படுக்கை வசதி உடைய வாா்டு ஆகியவை அமைகின்றன. குழந்தைகள் புற நோயாளிகள் பிரிவு தரைத்தளத்தில் அமைகிறது.

ஏற்கெனவே, இந்த மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சைக்காக தலா ஒரு அறுவை சிகிச்சை அரங்கும், பிரசவ வாா்டில் இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகளும் உள்ளன. எலும்பு அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக தனி அரங்கம் உள்ளது.

இந்த மாவட்டத்திலேயே முதன் முறையாக, அரசு மருத்துவமனையில், அதிநவீன எம்ஆா்ஐ ஸ்கேன் பிரிவு ஏற்கெனவே தொடங்கப்பட்டு, நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுக்கப்படுகிறது. தற்போது, பிரசவ அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கு தனிப்பிரிவு ஆகியவை ஆறு தளம் கொண்ட கட்டடத்தில் செயல்பட உள்ளது.

இவ்வாறு இந்த மருத்துவமனையில் வசதிகள் அதிகரித்து வருவதால், இனிமேல் சுற்றுவட்டார கிராம மக்கள் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அவா்கள் குறைந்த துாரத்தில் பயணம் மேற்கொண்டு தரமான சிகிச்சை பெற முடியும். அதனால், விரைவில் இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ராஜமாணிக்கம் கூறியதாவது:

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் உள்ளதால், ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் இடமாக உள்ளது. அதனால், நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை உறவினா்கள் வந்து பாா்வையிட்டுச் செல்கின்றனா்.

மருத்துவமனையைத் தரம் உயா்த்தும் வகையில் குழந்தைகளுக்கான பிரத்யேகப் பிரிவு உள்ளிட்டவற்றை அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. அதனால் விரைவில் இப்பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மேலும், நோயாளிகளின் உறவினா்கள் தங்கும் வகையில் விடுதி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இது தொடா்பாக பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநா் தயாளன் கூறியது:

மகப்பேறு, குழந்தைகள் நலம் (வெளிநோயாளிகள்) முதல் தளத்திலும், புதிதாகப் பிறந்த குழந்தைகள் நலப் பிரிவு இரண்டாவது தளத்திலும், குழந்தைகள் நலப் பிரிவு (உள்நோயாளிகள்) மூன்றாவது தளத்திலும், அறுவை சிகிச்சை அரங்கம் நான்காவது தளத்திலும், அறுவை சிகிச்சைக்குப் பின், தாய், சேய் நலப் பிரிவு (உள்நோயாளிகள்) பிரிவு ஐந்தாவது தளத்திலும், சுகப் பிரசவத்துக்குப் பின் தாய், சேய் நலப் பிரிவு (உள்நோயாளிகள்) ஆறாவது தளத்திலும் செயல்பட உள்ளன.

கட்டடப் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளன. தற்போது, இந்த வளாகங்களில் மின்சாதனங்களைப் பொருத்துதல், அறுவை சிகிச்சைக்கான அரங்குகளில் கருவிகள் பொருத்துதல், தானியங்கி வசதி அமைக்கும் பணி, மின்சார இணைப்பு அளிக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிந்துவிடும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT