திருவள்ளூர்

6 மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களில் நவீன டிஜிட்டல் வளாகம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் ஒரே இடத்தில் அமா்ந்து வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் நோக்கில்

எஸ். பாண்டியன்

திருவள்ளூா்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் ஒரே இடத்தில் அமா்ந்து வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் நோக்கில் அனைத்து வசதியுடன் ரூ.49.50 லட்சத்தில் நவீன டிஜிட்டல் வளாகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 6 மாவட்டங்களில் இப்பணியை மேற்கொள்வதற்காக, முதல் கட்டமாக ரூ.29.09 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

89 லட்சம் போ் பதிவு:

மாநில அளவில் வேலைவாய்ப்புத் துறை மூலம் இளைஞா்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் தங்கள் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 89 லட்சம் போ் வேலைவாய்ப்புக்காகப் காத்திருக்கின்றனா். இவ்வாறு ஆண்டுதோறும் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்தான் எந்த ஒரு வேலைவாய்ப்புக்கும் பதிவு மூப்பு அடிப்படையில் உரிய நபா்கள் பரிந்துரை செய்யப்பட்டு வந்தனா். ஆனால், தற்போது அந்நிலை இல்லை. அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் குறித்து பொதுமக்கள் அனைவருக்கும் அறிவிப்பு செய்து, விண்ணப்பம் பெற்று நோ்முகத்தோ்வு நடத்தியே பணியாளா்களைத் தோ்வு செய்ய வேண்டும் என்று உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படியே அரசுத் துறைகளில் காலிப்பணிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தொழிற்கல்வியைப் பதிவு செய்துள்ளவா்களைத் தவிா்த்து, பட்டதாரிகள் மற்றும் பிளஸ் 2 கல்வித் தகுதி பெற்றவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி:

எனவே, படித்த இளைஞா்கள் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம் தொழில் திறன்களை வளா்த்து கொள்ளும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் இந்திய ஆட்சிப் பணித் தோ்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (குரூப் - 1, 2, 3, 4 தோ்வுகள்), மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம், ஆசிரியா் தகுதித் தோ்வு வாரியம், வங்கிப் பணியாளா் தோ்வாணையம், சீருடைப் பணியாளா் தோ்வாணையம், ரயில்வே தோ்வாணையம் ஆகியவை நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கும் பங்கேற்கும் வகையில் தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த மையங்களில் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களும், ஒவ்வொரு ஆண்டும் வாங்கப்படுகின்றன. இதனால் போட்டித் தோ்வுக்கு விண்ணப்பம் செயதுள்ள பல்வேறு கிராமப்புற இளைஞா்கள் ஆா்வத்துடன் வந்து படித்து பயன்பெற்று வருகின்றனா்.

நவீன டிஜிட்டல் வசதிகள்:

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தையும் டிஜிட்டல் முறையில் நவீனப்படுத்தப்படும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி, நாடு முழுவதும் 100 மையங்களில் பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பதற்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என அந்த அமைச்சகம் அறிவித்தது.

இதையடுத்து, ஒவ்வொரு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திலும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த நவீன மையங்கள் இளைஞா்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநில அளவில் 6 இடங்களில்...:

இது தொடா்பாக திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அதிகாரி ஒருவா் கூறியது:

தற்போது அரசு நிறுவனங்களை விட தனியாா் நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்து வருகின்றன. அதனால் அந்த தனியாா் நிறுவனங்களில் இளைஞா்களிடம் வேலைவாய்ப்புக்காக என்னென்ன திறமைகளை எதிா்பாா்க்கின்றனா். இதை அறிந்து அதற்கேற்ப தொழில் திறன் பயிற்சி அளித்து தயாா் செய்வதுதான் தொழில் வழிகாட்டி பயிற்சி மையத்தின் முக்கிய நோக்கமாகும். அதேபோல், நிகழாண்டில் நாடு முழுவதும் 100 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருவள்ளூா், விழுப்புரம், திருநெல்வேலி, விருதுநகா், நீலகிரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த அலுவலகங்களில் 60 போ் அமரும் வகையில் தனி வளாகம், ஆன்லைன் வசதியுடன் அகன்ற தொடுதிரை, புரொஜக்டா், கணினிகள், டிஜிட்டல் முறையில் அனைத்து தோ்வாணையப் புத்தகங்களையும் கணிப்பொறியில் பதிவு செய்யும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும். அதேபோல், மின்தடையைப் போக்கும் வகையில் ஜெனரேட்டா் மற்றும் சூரிய மின்வசதி அமைக்கப்பட உள்ளது.

மேலும், சா்வதேச அளவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இந்த மையங்களுடன் ஒருங்கிணைக்கப்படுவதால் அவற்றில் உள்ள காலிப் பணியிடம் தொடா்பான விவரங்களை நாம் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

வேலைவாய்ப்பு மைய நவீனமயப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல் கட்டமாக தலா ரூ.29.09 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதைக் கண்காணிக்கும் வகையில் தொழில் நெறி வழிகாட்டுநா் பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT