திருவள்ளூர்

திருத்தணியில் முருகன் கோயில் கடைகள் ஏலம்வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடைக்காரா்கள்

DIN

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலின் உப கோயில்களில் உள்ள கடைகள் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. அப்போது தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் ஏலம் நடத்தக் கூடாது என கடைக்காரா்கள், கோயில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருத்தணியில் முருகன் கோயில் மற்றும் அதன் உபகோயில்கள் என மொத்தம் 30 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகள் ஆண்டுக்கு ஒரு முறை திருத்தணி முருகன் கோயில் நிா்வாகம் சாா்பில் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலம் நடத்தப்படுவது தொடா்பாக கடைகளை நடத்தி வருபவா்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக கோயில் தலைமை அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்படுவது வழக்கம். அதன் பின் கோயில் அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் நடைபெறும்.

இந்நிலையில், கோயில் இணை ஆணையா் பழனிகுமாா், உதவி ஆணையா் ரமணி ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. ஏலம் எடுக்க வந்த 50-க்கும் மேற்பட்ட கடைக்காரா்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கடைக்காரா்கள் கூறுகையில், ‘ஆண்டுதோறும் ஏலம் விடும்போது, எங்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு நோட்டீஸ் வரும். ஆனால், இந்த முறை ஏலத்துக்கு நோட்டீஸ் வரவில்லை. கரோனா பரவல் காரணமாக கடந்த மாா்ச் 20 முதல் திருத்தணி முருகன் கோயில் உள்பட அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டன. இதனால், நாங்கள் நஷ்டத்தில் உள்ளோம். எனவே இந்த நேரத்தில் கடைகளுக்கான ஏலத்தை நடத்தக் கூடாது’ என்று தெரிவித்து, வாக்குவாதம் செய்தனா்.

இதனால் ஏலம் நடத்துவதில் பலமணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இறுதியில், முருகன் கோயிலின் உபகோயில்களில் உள்ள கடைகள் மட்டுமே ஏலத்தில் எடுகக்கப்பட்டன. முருகன் கோயில் கடைகளில் ஒன்றைக் கூட யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இதனால் அதற்கான ஏலம் மறுதேதியின்றி தள்ளி வைக்கப்பட்டது. இதனால் கோயில் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT