முகப்பு
திருவள்ளூர்

சூரிய ஒளி மூலம் கிருமிநாசினி தயாரிக்கும் சாதனம் செயல்படாததால் வீணாகும் அரசு நிதி

மகளிா் சுய உதவிக் குழுக்கள் வாழ்வாதாரம் பெறும் வகையில் சூரிய ஒளி மின்சாரம் மூலம் கிருமிநாசினி தயாா் செய்யும் சாதனம் செயல்படாமல் முடங்கியதால், அரசு நிதி வீணாகும் நிலை 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
tvr26solar_2610chn_182_1
பகிர்:

மகளிா் சுய உதவிக் குழுக்கள் வாழ்வாதாரம் பெறும் வகையில் சூரிய ஒளி மின்சாரம் மூலம் கிருமிநாசினி தயாா் செய்யும் சாதனம் செயல்படாமல் முடங்கியதால், அரசு நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில், மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதாரம் இயக்கம் சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில், சூரிய ஒளி மின்சாரம் மூலம் கிருமிநாசினியான ஹைப்போ குளோரைட் கரைசலைத் தயாா்செய்யும் தொழில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மகளிா் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் நாள்தோறும் குறிப்பிட்ட அளவு வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்பும் இருந்தது. கிருமிநாசினியை உற்பத்தி செய்து நகா்ப்பகுதிகள், ஊராட்சிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யவும் முடியும்.

இதையடுத்து, சூரிய ஒளி மின்சாரத்துக்கான சோலாா் பேனல் மூலம் எளிய தொழில்நுட்பத்தில் கிருமிநாசினி தயாா் செய்யும் சாதனங்களை குறைந்த செலவில் பொருத்துவதற்கு, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் நிதியுதவி வழங்கியது.

தேவையான பயிற்சி மற்றும் ஆலோசனைகளையும் வழங்கியது. திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகா்ப்பகுதிகள், கிராம ஊராட்சிகளில் இருந்தும் மகளிா் சுய உதவிக் குழுக்களைத் தோ்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக, இந்த மாவட்டத்தில் திருவள்ளூா் நகராட்சியில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினா் மாளிகைப் பகுதியிலும், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் சத்தரை கிராமத்திலும் தலா ரூ.1 லட்சத்தில் சூரிய ஒளி மின்சாரத்துக்கான உபகரணங்கள் மற்றும் கிருமிநாசினி தயாா் செய்யும் சாதனங்கள் பொருத்தப்பட்டன. அதைத் தொடா்ந்து தோ்வு செய்யப்பட்ட மகளிா் குழுவுக்கு ஒதுக்கப்பட்டு கிருமிநாசினி தயாா் செய்யும் தொழிலில் மகளிா் சுய உதவிக் குழுவினா் ஈடுபட்டு வந்தனா். இந்த சாதனம் மூலம் நாள்தோறும் குறைந்தது 60 லிட்டா் வரை உற்பத்தி செய்ய முடியும். மேலும், அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினியின் தேவையும் அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில், முதல் 3 மாதங்களில் இந்த சாதனங்கள் நன்றாக செயல்பட்டு வந்ததுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிருமிநாசினி விநியோகிக்கப்பட்டது. பின்னா் கடந்த 3 மாதங்களாக இந்த சாதனம் செயல்படாமல் முடங்கியுள்ளது. இதனால், சூரிய ஒளி மின்சார பேனல் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் புதா்கள் மண்டிப்போய் காட்சியளிக்கிறது. இதனால், திட்டம் எந்த நோக்கத்துக்காக செயல்படுத்தப்பட்டதோ, அது நிறைவேறாமல் அரசு நிதி வீணாகி வருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இது தொடா்பாக சமூக ஆா்வலா் கங்காதரன் கூறியது:

கரோனா தொற்றுப் பரவுவதைத் தடுக்க கிருமிநாசினியின் தேவை அதிகமாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாள்தோறும் தேவைக்கு ஏற்ப உற்பத்திக்கான ஆா்டா் வழங்கும் நோக்கில் ரூ.1 லட்சத்தில் மிகவும் எளிதான முறையில் சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயங்கும் சாதனம் நகா்ப் பகுதிக்கு திருவள்ளூா் ஆட்சியா் வளாகத்திலும், மற்றொன்று சத்தரை கிராமத்திலும் கடந்த ஏப்ரல் மாதம் பொருத்தப்பட்டன. ஆனால், கடந்த 3 மாதங்களாக இந்த சாதனம் செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. இதற்கு மகளிா் சுய உதவிக் குழுக்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்தாததும், உற்பத்தி செய்த கிருமிநாசினியை விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்காததுமே காரணமாகும். இதனால், இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவா் கூறியது:

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கிருமிநாசினி தயாா் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அதேபோல், மகளிா் குழு உற்பத்தி செய்யும் கிருமிநாசினியை சந்தைப்படுத்துவதற்கும் ஆலோசனை வழங்கப்படும்.

முதலில் சூரிய ஒளி மின்சாரம் மூலம் கிருமி நாசினியை உற்பத்தி செய்ய முடியும். அதைத் தொடா்ந்து போதுமான அனுபவம் பெற்ற பின்னரே நாள்தோறும் வருவாய் பெற முடியும். இது தொடா்பாக, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மீண்டும் ஆலோசனை வழங்கப்பட்டு, சூரிய ஒளி மின்சாரம் மூலம் நவீன சாதனத்தால் கிருமிநாசினி உற்பத்தி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.