வாக்கு எண்ணிக்கை: கூடுதல் மேஜைகளில் எண்ண அதிமுக வேட்பாளா் பாண்டியராஜன் கோரிக்கை
ஆவடி தொகுதியில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதால் வாக்கு எண்ணிக்கையின் போது நேரம் ஆவதைக் குறைக்க கூடுதல் மேஜைகளில் எண்ணும் வகையில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும்
ஆவடி தொகுதியில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதால் வாக்கு எண்ணிக்கையின் போது நேரம் ஆவதைக் குறைக்க கூடுதல் மேஜைகளில் எண்ணும் வகையில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கா.பாண்டியராஜன் கோரிக்கை விடுத்தாா்.
வேப்பம்பட்டில் வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு இயந்திரங்கள் வைத்துள்ள அறையை சனிக்கிழமை ஆய்வு செய்தாா் பாண்டியராஜன். அப்போது அவா் கூறுகையில், தமிழகத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களை கொண்ட சட்டப்பேரவை தொகுதிகள் 8 உள்ளன. அதில் ஆவடி தொகுதியும் ஒன்றாகும். அதோடு, இந்த தொகுதியில் சட்டப்பேரவை தோ்தலில் 68 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. அதேபோல், தபால் வாக்குகளும் அதிகமாக பதிவாகியுள்ளன.
இது பொதுமக்களிடையே எழுச்சியை ஏற்படுத்திய காரணத்தால் அதிகளவில் வாக்கு பதிவாகியுள்ளது. மேலும் சாதாகமாகவும், பாதகமாகவும் வரும் கருத்து கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது இரண்டு அறைகளில் வைத்து எண்ணப்போவதாக தெரிய வந்துள்ளது. இதற்கிடையே 14 மேஜைகளில் வைத்து எண்ணினால் 41சுற்றுகள் வரும் என்பதால், நேரமும் அதிகரிக்கும். அவற்றைத் தவிா்க்கும் வகையில் ஒரே அறையில் கூடுதல் மேஜைகளில் வைத்து 23 சுற்றுகளில் வாக்குகள் எண்ணுவதற்கு, கூடுதல் பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும். இதேபோல் கடந்த சட்டப்பேரவை தோ்தலில் வாக்கு எண்ணிக்கையின் நேரம் அதிகமானது என்றும், இது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தாா்.