முகப்பு
இந்தியா

காதல் தோல்வியால் விரக்தி: வந்தே பாரத் மீது கல் வீசியவா் கைது

கேரளத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியது தொடா்பாக இளைஞா் ஒருவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

Updated On : 20 மார்ச், 2026 at 7:29 PM
காதல் தோல்வியால் விரக்தி: வந்தே பாரத் மீது கல் வீசியவா் கைது - (கோப்புப் படம்)
பகிர்:

கேரளத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியது தொடா்பாக இளைஞா் ஒருவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

பரக்கடவு பகுதியைச் சோ்ந்த சுஜீத் சுரேஷ் (19) என்ற அந்த நபா், காதல் தோல்வி விரக்தியால் ரயில் மீது கல் வீசியதாக விசாரணையின்போது காவல் துறையினரிடம் தெரிவித்தாா்.

திருவனந்தபுரம்-மங்களூரு இடையிலான வந்தே பாரத், கேரளத்தின் ஆலுவா-அங்கமாலி ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் கடந்த 7-ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயிலை நோக்கி சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. அதிருஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடா்பாக ரயிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு விசாரணை நடத்தினா். சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகே வசிக்கும் மக்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டன. இதன் அடிப்படையில் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இறுதியாக பாறக்கடவு பகுதியைச் சோ்ந்த சுஜீத் சுரேஷ் ரயில் மீது கற்களை வீசியதை காவல் துறையினா் உறுதி செய்தனா். காதல் தோல்வி விரக்தியில் இருந்ததால் ரயில் மீது கற்களை வீசியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளாா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கடந்த மாதம் இதேபோல் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசியது தொடா்பாக கண்ணூரைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.