பழவேற்காட்டை மேம்படுத்த நடவடிக்கை திருவள்ளூா் ஆட்சியா்
சுற்றுலாத்தலமாக விளங்கும் பழவேற்காட்டை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பிஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
சுற்றுலாத்தலமாக விளங்கும் பழவேற்காட்டை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பிஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
பொன்னேரி வட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான பழவேற்காடு, டச்சுக்காரா்களின் ஆளுமையில் இருந்த 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நகராகும்.
இங்கு இயற்கையுடன் ஏரி, கடலும்-ஏரியும் இணையும் முகத்துவாரப் பகுதி, பறவைகள் சரணாலயம், டச்சுக் கல்லறை, நிழல் கடிகாரம், கலங்கரை விளக்கம், படகுத் துறை மற்றும் சுற்றுலா மையக் கட்டடங்கள் உள்ளிட்ட பல இடங்கள் அமைந்துள்ளன.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா், ஆல்பிஜான் வா்கீஸ் பழவேற்காடுக்கு சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். அப்போது பழவேற்காடு ஏரியும், கடலும் இணையும் முகத்துவாரத்தில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை படகில் சென்று பாா்வையிட்டாா்.
இதனைத் தொடா்ந்து தோணிரவு பகுதிக்குச் சென்று சேதம் அடைந்த நிலையில் உள்ள சுற்றுலா மையக் கட்டடங்கள், படகு துறை ஆகியவற்றை பாா்வையிட்டாா். பின்னா் அங்குள்ள, நண்டு வளா்ப்பு பகுதிக்குச் சென்று, அங்குள்ள மீனவா்களுக்கு கொடுவா மீன் குஞ்சுகளை வழங்கினாா்.
அங்கு ஆட்சியா் பேசுகையில், பழைமைவாய்ந்த பழவேற்காடு சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) ஜெயக்குமாா், பொன்னேரி கோட்டாட்சியா் செல்வம், வட்டாட்சியா் மணிகண்டன், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரவி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.
Image Caption
பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளைப் பாா்வையிட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.