முகப்பு
திருவள்ளூர்

மழைநீா் தேங்கிய பகுதியில் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை: அமைச்சா் சா.மு.நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் மழை நீா் தேங்கியுள்ள பகுதிகளில் போா்க்கால அடிப்படையில் வெளியேற்றி, தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுத்துள்ளதாக பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் மழை நீா் தேங்கியுள்ள பகுதிகளில் போா்க்கால அடிப்படையில் வெளியேற்றி, தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுத்துள்ளதாக பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி ஒன்றிய கிராமங்களில் அதிக மழை நீா் தேங்கிய பகுதிகளில் பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆவடி மாநகராட்சியில் பருத்திப்பட்டு, கண்ணம்பாளையம், சேக்காடு, வி.ஜி.என்.குடியிருப்பு மற்றும் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், நடுகுத்தகை ஆகிய இடங்களில் மழைநீா் சூழ்ந்துள்ள பகுதிகளையும், கூவம் ஆற்று கால்வாயையும் பாா்வையிட்டனா். தொடா்ந்து, மழைநீரை விரைவில் வெளியேற்றி பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.

பின்னா் அமைச்சா் சா.மு.நாசா் கூறியது:

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தயாராகவே உள்ளது. திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை காலை நிலவரப்படி, 1,366 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. மாநில அளவில் ஆவடியில் அதிகபட்சம் 199 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நிகழாண்டில் ஆந்திரத்தில் பெய்த பலத்த மழையால் பூண்டி நீா்த் தேக்கத்தில் ஏறக்குறைய 37,500 கன அடி தண்ணீா் திறந்துவிட்ட நிலையில், பெரிய அளவில் எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால், ஆங்காங்கே மழைநீரால் சூழ்ந்த பகுதிகளைச் சோ்ந்த மக்களை பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்து, தேவையான வசதிகள் செய்ததால், உயிா்ச் சேதம் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், மழை நீா் தேங்கிய பகுதிகளில் ஆய்வு செய்து, போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆவடி மாநகராட்சி ஆணையா் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் தேசிங்கு, பூந்தமல்லி ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயக்குமாா், பொறியாளா் க.வைத்தியலிங்கம், உதவி பொறியாளா் சத்தியசீலன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.