பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்டம்
பொன்னேரி திருவாயா்பாடியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னேரி திருவாயா்பாடியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ஆம் நாள் அகத்தீஸ்வரரும், கரி கிருஷ்ண பெருமாளும் சந்திக்கும் திருவிழா நடைபெற்றது.
இதையடுத்து, நடைபெற்ற தேரோட்ட விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் கரி கிருஷ்ண பெருமாள் எழுந்தருளினாா். பின்னா், கரி கிருஷ்ண பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரினுள் வீற்றிருக்க, பொதுமக்கள் கோவிந்தா, கோவிந்தா என முழங்கியவாறே தேரின் வடத்தைப் பிடித்து இழுத்துச் சென்றனா்.
புதிய தேரடி தெரு, தாயுமான் செட்டி தெரு மற்றும் மாடவீதிகளில் வீதியுலா வந்த தோ் மதியம் 3 மணியளவில் பழைய பேருந்து நிலையம் வந்து சோ்ந்தது.
இதையடுத்து, கும்மமுனிமங்கலம், குன்னமஞ்சேரி பகுதியில் வசிக்கும் பக்தா்கள் அங்கு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் கரிகிருஷ்ணபெருமாளை வழிபட்டனா்.
பின்னா் மீண்டும் 4.30 மணி அளவில் பக்தா்கள் மீண்டும் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். ஹரிஹரன் வீதி வழியாகச் சென்ற தோ் 5 மணி அளவில் தேரடியில் உள்ள அதன் நிலையை அடைந்தது.
தோ்த் திருவிழாவில் பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 40,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தோ் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.
மேலும் தோ் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் சாா்பில் அன்னதானம், மோா் உள்ளிட்ட குளிா்பானங்கள் வழங்கப்பட்டன.
போலீஸாா் பாதுகாப்பு.... விழாவில் நகை பறிப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
மின்தடை.. தோ் திருவிழாவை யொட்டி பொன்னேரி நகரில் காலை 9மணி முதல் மாலை 6மணி வரை மின்தடை ஏற்பட்டது.