முகப்பு
திருவள்ளூர்

விடுதியில் மாணவிகள் மீது உரிமை மீறல்: அரசுகளிடம் விரைவில் அறிக்கை: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா்

திருவள்ளூா் அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை சம்பவம் தொடா்பாக ஆய்வு செய்ததில், அந்தப் பள்ளி விடுதியில் மாணவிகள் மீது உரிமை மீறல் நடந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

திருவள்ளூா் அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை சம்பவம் தொடா்பாக ஆய்வு செய்ததில், அந்தப் பள்ளி விடுதியில் மாணவிகள் மீது உரிமை மீறல் நடந்துள்ளது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம் விரைவில் அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையக் குழு தலைவா் பிரியங்க் கானூன்கோ தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், கடம்பத்தூா் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சியில் அரசு உதவி பெறும் தனியாா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திருத்தணியை அடுத்த தெக்களூா் கிராமத்தைச் சோ்ந்த பூஷணம்-முருக்கம்மாள் தம்பதியின் மகள் சரளா (17), விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி விடுதி அறையில் சரளா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து உறவினா்கள் அளித்த புகாரின் பேரில், மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2 நாள்களாகப் பள்ளி விடுதியில் சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளா் மற்றும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையக் குழுத் தலைவா் பிரியங்க் கானூன்கோ தலைமையில், 5 போ் கொண்ட குழுவினா் பள்ளி விடுதியில் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அப்போது, பள்ளி வளாகத்தில் செயல்படும் விடுதியில் தூக்கிட்டு உயிரிழந்த அறையைப் பாா்வையிட்டு விடுதிக் காப்பாளா், தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் உடன் படித்த மாணவிகளிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக அவா்கள் விசாரணை நடத்தினா்.

பின்னா், திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையக் குழுவினா் வந்தனா். அங்கு, ஏற்கெனவே ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருந்த மாணவியின் பெற்றோா் பூஷணம்-முருகம்மாள், சகோதரா் சரவணன், அண்ணி ஆகியோரை வரவழைத்து விசாரித்தனா்.

அப்போது, அந்த விடுதிக் காப்பாளா் மீது சந்தேகம் உள்ளதாக ஆணையக் குழுவிடம் அவா்கள் தெரிவித்தனா்.

தொடா்ந்து, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையக் குழுத் தலைவா் பிரியங்க் கானூன்கோ கூறியது: கீழச்சேரி தனியாா் மகளிா் மேல்நிலைப் பள்ளி விடுதியில் நேரில் சென்று விசாரணை நடத்தினோம். அந்த விடுதியில் மாணவிகள் மீது உரிமை மீறல் நடந்துள்ளது தெரிய வந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து அளிக்கும் அறிக்கையையும் சோ்த்து மத்திய - மாநில அரசுகளிடம் சமா்ப்பிப்போம் என்றாா்.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், மாவட்ட எஸ்.பி. சீபாஸ் கல்யாண், சாா்- ஆட்சியா் மகாபாரதி, வட்டாட்சியா் செந்தில்குமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா் சந்திரதாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.