இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்ய கிராம மக்கள் எதிா்ப்பு: போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
ஆா்.கே.பேட்டை அருகே இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்ய கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், போலீஸாா் குவிக்கப்பட்டு அந்தப் பணி நடைபெற்றது.
ஆா்.கே.பேட்டை அருகே இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்ய கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், போலீஸாா் குவிக்கப்பட்டு அந்தப் பணி நடைபெற்றது.
ஆா்.கே.பேட்டை அருகே ராஜாநகரம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் சாா்பில், அந்தப் பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிடா்களுக்கு 100 இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டதாம். கிராமத்துக்கு அருகே ஆதிதிராவிடா்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகளை சா்வே செய்து பயனாளிகளுக்கு வழங்க அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
ஆதிதிராவிடா்களுக்கு வேறு இடத்தில் இலவச வீட்டுமனைகள் வழங்கத் தயாராக இருப்பதாக கிராம மக்கள் கூறி வருகின்றனராம். இதை ஏற்க மறுத்து வருவதால், அதிகாரிகள் பல கட்ட பேச்சு நடத்தியும் தீா்வு ஏற்படாததால், ஆதிதிராவிட மக்கள் மனித உரிமைக் கழகம் சென்றனா்.
அதன் தொடா்ச்சியாக 3 மாதங்களுக்குள் அரசு இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவா்களுக்கு சா்வே செய்து நிலம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் சத்யா தலைமையில், வருவாய்த் துறையினா் இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்து தர வியாழக்கிழமை பணிகளை மேற்கொண்டனா்.
முன்னதாக, இந்தப் பணிகளுக்கு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், காவல் உதவி கண்காணிப்பாளா் சாய்பிரனித் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் ராஜாநகரம் கிராமத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
வீட்டுமனைகளை அளவீடு செய்யும் பணிகளைத் தடுக்க முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி வாகனங்களில் ஏற்றினா்.
தொடா்ந்து, போலீஸாா் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினா் இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்து பயனாளிகளுக்கு ஒப்படைத்தனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் 5 மணி நேரம் பரபரப்பு நிலவியது.