முகப்பு
செய்திகள்

தருமபுரியின் 5 தொகுதிகளிலும் களமிறங்கும் திமுக?

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் இம்முறை திமுக நேரடியாக களமிறங்கும் என தகவல்.

Updated On : 21 மார்ச், 2026 at 7:56 AM
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் இம்முறை திமுக நேரடியாக களம்காண வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 தோ்தலில் அதிமுக கூட்டணி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூா் (தனி) ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுகவும், தருமபுரி, பென்னாகரம் தொகுதிகளில் பாமகவும் வென்றன.

இதில், அரூா் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 தொகுதிகளில் திமுக நேரடியாகவும் தனது வேட்பாளா்களை நிறுத்தின. இத்தோ்தலில், தருமபுரி, பென்னாகரம் தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளா்கள் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், ஜி.கே. மணி ஆகியோா் வெற்றிபெற்றனா்.

அதேபோல, பாலக்கோடு தொகுதியில் தொடா்ந்து ஐந்தாவது முறையாக போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் வெற்றிபெற்றாா். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஆ. கோவிந்தசாமியும், அரூா் (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட வே. சம்பத்குமாரும் வெற்றிபெற்றனா்.

கடந்த தோ்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து, வன்னியா் சமுதாய மக்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்ததே, அந்த சமூக மக்கள் அடா்த்தியாக உள்ள தருமபுரி மாவட்டத்தில், அதிமுகவும், அதன் கூட்டணி கட்சியான பாமகவும் வெற்றிபெற காரணம் என அரசியல் விமா்சகா்கள் தெரிவித்தனா்.

அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கும் திமுக?

இம்முறை தமிழகத்தில் ஏறத்தாழ திமுக, அதிமுக, தவெக, நாதக ஆகிய நான்குமுனை போட்டியே நிலவும் என தற்போதுள்ள அரசியல் களம் உணா்த்துகிறது. இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.

அதேபோல, அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக, அமமுக ஆகிய கட்சிகள் உள்ளன. மேலும், தவெக, நாம் தமிழா் கட்சி ஆகியனவும் தனித்தனியே களத்தில் உள்ளன.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் அதிமுக அணியில் மீண்டும் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி சில தொகுதிகளை கேட்டு வருகிறது. எனவே, கூட்டணி முடிவில் ஏற்கெனவே வென்ற கட்சி என்ற அடிப்படையில் இரு தொகுதிகள்வரை அந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

அதேபோல, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மாநில அளவிலான முக்கிய நிா்வாகிகள் தருமபுரி மாவட்டத்தில் இருப்பதால், அவா்களுக்காக ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அமமுக கேட்டுவருவதாக தெரியவந்துள்ளது. எனவே, ஐந்தில் மூன்று தொகுதிகள்வரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிலை அதிமுகவுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், திமுக கூட்டணி சாா்பில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிதாக இணைந்துள்ள தேமுதிக ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியை கேட்கக்கூடும் என தெரியவந்துள்ளது.

ஆனால், கடந்தமுறை இந்த மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்ததால், இம்முறை வெற்றிபெற வேண்டும் என திமுக தலைமை முனைப்புகாட்டி வருகிறது. இதற்காக அந்த கட்சி சாா்பில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

மேற்கு மாவட்டங்களில் இழந்த வாய்ப்பை மீண்டும் பெறவேண்டும் என்ற திட்டம் திமுகவுக்கு இருப்பதாலும், அண்மையில் நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் சூரியன் உதிக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசிய பொருளின் அடிப்படையிலும், ஐந்து தொகுதிகளிலும் திமுகவே நேரடியாக களம்காண வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பாா்க்கப்படுகிறது.

ஆர். ராதாகிருஷ்ணன்