லாரியில் சங்கிலி அறுந்ததால் சாலையில் சரிந்த இரும்புத் தூண்கள்: போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூா்-திருத்தணி சாலையில் லாரியில் ஏற்றிச் சென்ற பெரிய இரும்புத் தூண்கள் சங்கிலி அறுந்ததால், சாலையில் சரிந்து விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூா்-திருத்தணி சாலையில் லாரியில் ஏற்றிச் சென்ற பெரிய இரும்புத் தூண்கள் சங்கிலி அறுந்ததால், சாலையில் சரிந்து விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூா் ஜெ.என் சாலையில் சென்னை, பூந்தமல்லி, திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்தச் சாலை எந்த நேரமும் போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படும்.
இந்த நிலையில், பெரியபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் தனியாா் தொழிற்சாலை பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட பெரிய இரும்புத் தூண்கள், திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே லாரியில் சங்கிலி அறுந்ததால், சாலையில் சரிந்து விழுந்தன.
மக்கள் நடமாட்டமும், போக்குவரத்தும் அதிகமுள்ள இந்தப் பகுதியில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தகவலறிந்து வந்த திருவள்ளூா் நகரக் காவல் நிலைய போலீஸாா், வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.
கிரேன் வாகனம் கொண்டு வரப்பட்டு தூண்கள் மீண்டும் லாரியில் ஏற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டன. இதனால், சென்னை-திருத்தணி சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.