கும்மிடிப்பூண்டி: 10, +2 மாணவர்களுக்கு தேர்வு கையேடு வழங்கிய பிர்லா கார்பன் நிறுவனம்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பிர்லா கார்பன் நிறுவனத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பிர்லா கார்பன் நிறுவனத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு படிக்கும் 832 மாணவர்களுக்கு தேர்வு குறித்த பயிற்சி அளித்ததோடு தேர்வு கையேடும் வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளுக்கான ஒரு நாள் தேர்வு வழிகாட்டுதல் வகுப்பும், மாணவர்களுக்கு குறைந்த பட்ச தேர்வுக்கான கற்றல் கையேடுகள் வழங்கும் நிகழ்வு பிர்லா கார்பன் நிறுவனத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.
நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மிர் அலி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் வள்ளிமுத்து, புகழேந்தி முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் பிர்லா கார்பன் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவர் பி.எல்.தாஸ் பங்கேற்று 10,12 ஆம் வகுப்பை சேர்ந்த 400 மாணவர்களுக்கு தேர்வு கையேட்டினை வழங்கினார். தொடர்ந்து பாடங்கள் வாரியாக தேர்வை சிறப்பாக எழுதுவது குறித்து ஆசிரியர் குழுவினர் பயிற்சி அளித்தனர்.
புது கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி, எஸ்.ஆர்.கண்டிகை அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சியில் இருந்து பல்வேறு பள்ளிகளில் படிக்கும் பொதுத் தேர்வு எழுதும் 832 மாணவர்களுக்கு தேர்வு கையேடுகள் வழங்கப்பட்டது.
பிர்லா கார்பன் நிறுவனத்தின் மூலம் கடந்த 9 ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு குறித்த சிறப்பு பயிற்சியும், தேர்வு கையேடு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விழா முடிவில் பிர்லா கார்பன் நிறுவன மனித வளத் துறை அலுவலர் பெர்ணாண்டஸ் நன்றி தெரிவித்தார்.