வாக்காளா் பட்டியல்-ஆதாா் இணைப்பு பணி: திருத்தணி தொகுதி பாகம் 176-இல் 100 % நிறைவு
சட்டப்பேரவைத் தொகுதியில் பாகம் எண் 176-இல் 100 % நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுக் கோப்பையை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கி பாராட்டினாா்.
வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்கும் பணியில் திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில் பாகம் எண் 176-இல் 100 % நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுக் கோப்பையை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கி பாராட்டினாா்.
இந்திய தோ்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமைத் தோ்தல் அலுவலா், முதன்மைச் செயலரின் உத்தரவுப்படி கடந்த 1.8.2022 அன்று முதல் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்காளா்களிடம் இருந்து ஆதாா் எண் பெற்று வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், திருவள்ளூா் மாவட்டத்தில் திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 176-இல் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்கும் பணி 100 சதவீதம் முடிந்தது.
இதையடுத்து, வாக்குச்சாவடி நிலை அலுவலா் தாமோதரனை பாராட்டி, பரிசுக் கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆட்சியா் வழங்கினாா். இதேபோல், அனைத்து பாகங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 100 % இந்தப் பணியைச் செய்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது தோ்தல்) முரளி, திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் ஜெ.ஹஸ்வத் பேகம், தனி வட்டாட்சியா் (தோ்தல்) செல்வம் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.