முகப்பு
தமிழ்நாடு

திமுகவுக்கு அழுத்தம்; அதிமுகவுக்கு பின்னடைவு: திருமாவளவன்

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டில் திமுகவுக்கு அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

Updated On : 21 மார்ச், 2026 at 8:19 AM
திருமாவளவன் - விடியோ க்ளிப்
பகிர்:

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டில் அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசுகையில், "விசிக-வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் ஓரிரு நாள்களில் தெரிந்து விடும். குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளைப் பெறும் நிலையிலேயே இருக்கிறோம்.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகளின் வருகையால், தொகுதிகளைக் குறைத்து கொடுப்பதற்கான அழுத்தம், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது மெகா கூட்டணி. குறைந்த தொகுதிகளில் போட்டியிட திமுக முன்வந்திருக்கும் நிலையில், விசிகவும் விட்டுக்கொடுக்க வேண்டும்.

தொகுதிப் பங்கீட்டில் கால தாமதம் ஏற்பட்டாலும், சுமூகமான தீர்வு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. கட்சி நலனைப்போல கூட்டணி நலனும் முக்கியம்" என்று தெரிவித்தார்.

மேலும், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணம் குறித்த கேள்விக்கு, "வழக்கமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்குத்தான் தில்லியிலிருந்து வருவர். ஆனால், இப்போது அதிமுகவின் தலைவர்களும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தில்லி சென்று அமித் ஷாவையும் பிரதமர் மோடியையும் சந்திக்க காத்திருக்கின்றனர். அவரை கிள்ளுக் கீரையாக பாஜக நடத்துவதாக பொது வெளியில் தெரிகிறது. இதனை அதிமுகவுக்கு பின்னடைவாகக் கருதுகிறேன்.

அது அவர்களின் பிரச்னை. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன். எந்த நிலையிலும், அதிமுகவின் சமூக நீதி இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும். கூட்டணியை அதிமுகதான் வழிநடத்த வேண்டும்" என்றும் திருமாவளவன் பதிலளித்தார்.

summary

DMK has to accommodate everyone in this alliance, says VCK Leader Thol. Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.