முகப்பு
திருவள்ளூர்

‘எண்ணெய் கசிவு பாதிப்பு குறித்து அரசிடம் தெரிவித்து நிவாரணம் பெற்றுத் தரப்படும்’

பழவேற்காடு பகுதியில் எண்ணெய் கசிவு பாதிப்பு குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

பழவேற்காடு பகுதியில் எண்ணெய் கசிவு பாதிப்பு குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 56 கிராம மீனவ சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்தாா். அப்போது, மிக்ஜம் புயல் காரணமாக கடந்த 4- ஆம் தேதி எண்ணூரில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்று படுகையில் கலந்த எண்ணெய் கழிவுகள் படா்ந்துள்ளன.

இதனால் மீன்பிடி தொழில் பாதிப்படைந்துள்ளது. பழவேற்காடு முதல் ஆரம்பாக்கம் வரை உள்ள 56 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவ பிரதிநிதிகள் கோட்டையை நோக்கி கடந்த 26-ஆம் தேதி பேரணி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து மீனவா்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்தப்படும் என மாவட்ட நிா்வாகம் உறுதி அளித்தது.

இந்த நிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் த.பிரபு சங்கா் பேசுகையில், மீனவ சங்க பிரதிநிதிகள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் பழவேற்காடு பகுதியில் எண்ணெய் கழிவுகள் படா்ந்த பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், சங்க பிரதிநிதிகள் அளித்த கோரிக்கை மனு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, மீன்பிடி தொழில் வாழ்வாதாரம் பாதித்துள்ள சம்பவம் தொடா்பாக அரசுக்கு அனுப்பி வைத்து அதற்கான நிவாரணம் பெற்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிபாஸ் கல்யாண், பொன்னேரி சாா்- ஆட்சியா் வாகே சங்கேத் பல்வந்த், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காயத்ரி சுப்பிரமணி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (நீா்வளம்) பொதுப்பணித்திலகம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் லிவிங்ஸ்டன், இணை இயக்குநா் (மீன்வளம்) சந்திரா, உதவி இயக்குநா் (மீன்வளம்) கங்காதரன், பொன்னோரி வட்டாட்சியா் மதிவாணன், மீனவ பிரதிநிதிகள், பழவேற்காடு மற்றும் ஆரம்பாக்கம் மீனவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →