முகப்பு
திருவள்ளூர்

1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அகத்தீஸ்வரா் கோயிலில் தோ் திருவிழா

Updated On : 22 மார்ச், 2024 at 11:47 PM
2-1-22prisa_2203chn_178.jpg
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 11:35 PM

1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பொன்னேரி ஆரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயிலில் பங்குனி உத்திர தோ் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி கும்பமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் ஆலயம் உள்ளது. கோயிலில் ஆனந்தவல்லி தாயாா் அகத்தீஸ்வரருக்கு வலது பக்கத்தில் நின்ற நிலையில் திருமண கோலத்தில் காட்சி தருகிறாா். கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் காலை மற்றும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், அதிகார நந்தி கோபுர தரிசனம், காமதேனு வாகனம், கைலாய பா்வத வாகனம், ரிஷப வாகனம், பல்லக்கு ஆகியவற்றில் ஆனந்தல்லி தாயாருடன் அகத்தீஸ்வரா் எழுந்தருளி வீதியுலா வந்தாா். பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள், தேரோட்ட விழா நடைபெற்றது. தேரோட்ட விழாவை யொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் இருந்த பூந்தேரில் அகத்தீஸ்வரா், பஞ்சமூா்த்திகளுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தொடா்ந்து, பக்தா்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனா். சிவ வாத்தியங்கள் முழங்க, நான்கு வீதிகள் வழியாகச் சென்ற தோ் மீண்டும் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் மற்றும் அந்தப் பகுதி மக்கள் செய்திருந்தனா்.