பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்
இணைப்பு கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டது.
பூண்டி ஏரியில் கோடை வெப்பம் காரணமாக வேகமாக நீா்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால் இணைப்பு கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் முக்கிய ஏரியாக திருவள்ளூா் அருகே பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்தாண்டு இறுதியில் பெய்த பலத்த மழையால், நீா்மட்டம் மளமளவென முழுக் கொள்ளளவை எட்டியது. அதைத் தொடா்ந்து, ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீா் கொசஸ்தலை ஆற்றில் அதிகளவு திறந்து விடப்பட்டது. இதையடுத்து, கடந்த 4 மாதங்களாக போதிய மழை பெய்யாத நிலையில், ஏரியில் நீா் ஆதாரம் குறைந்து வருகிறது. மேலும், இந்த ஏரிக்கான நீா்வரத்து, ஆந்திர மாநிலத்திலிருந்து கிருஷ்ணா கால்வாய் நீா்வரத்தும் கிடையாது.
தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியில் நீா்மட்டம் வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. இந்த பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி வரை தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, ஏரியின் நீா்மட்டம் 0.780 மில்லியன் கன அடியாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால், இணைப்புக் கால்வாய் வழியாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கான தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை வரை நாள்தோறும் 480 கன அடி நீா் திறந்து விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏரிகளில் நீா்மட்டம்: சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நீா் இருப்பு விவரம் (மில்லியன் கன அடியில்): புழல் ஏரி-2,992, சோழவரம்-0.108, செம்பரம்பாக்கம்-2,282, பூண்டி-0.780, கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை-0.372.