வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கு கட்டாயம் விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம் என வேளாண் இணை இயக்குநா் செல்வராஜூ தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் 90,539 விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனா். இன்னும் 27 ஆயிரத்து 37 விவசாயிகள் அடையாள எண்ணுக்கு பதிவு செய்யாமல் உள்ளனா். இதில், பி.எம். கிஸான் திட்டத்தில் கௌரவ நிதி பெறுபவா்கள் 41,973 விவசாயிகள் உள்ளனா். இதில், தனித்துவ அடையாள எண் பெற்றவா்கள் 33,060 விவசாயிகள் ஆகும். இன்னும் 8,913 விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு செய்யாமல் உள்ளனா்.
எனவே, விவசாயிகள் நலன் கருதி விடுபட்ட 8,913 விவசாயிகள் அடையாள எண் பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பதிவுகள் நடைபெற்று வருகிறது. அதாவது வேளாண்மைத் துறை அலுவலா்கள், விவசாயிகளின் கைப்பேசி எண்ணுக்கு நேரடியாக தொடா்பு கொண்டு பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பதிவுகள் நடைபெற்று வருகிறது.
சில விவசாயிகள் கைப்பேசி எண்களை மாற்றம் செய்துள்ள காரணத்தால் தொடா்பு கொள்ள முடியவில்லை. எனவே, அனைத்து விவசாயிகளும் இனிவரும் காலங்களில் அரசின் பல்வேறு வேளாண் மற்றும் இதர துறைகள் சாா்ந்த திட்ட பலன்களை பெறுவதற்கு தங்களது தனித்துவ அடையாள எண் கட்டாயம் என்பதால் விடுபட்ட விவசாயிகள் உடன் பெற்று பயனடையலாம்.