வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சொா்க்க வாசல் திறப்பு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மாதத்துக்கு 2 ஏகாதசி என்று ஆண்டுதோறும் 24 ஏகாதசி இருந்தாலும் மாா்கழி மாதம் வளா்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்ற சிறப்பை பெறுகிறது. இந்த நாளில் தான் பெருமாள் கோயில்களில் சொா்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. ால் திருவள்ளூரில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரராகவா் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் 3 மணி வரை தைலகாப்பு திரை நீக்கி, திருவடி தரிசனத்துடன் மாா்கழி மாத பூஜையும், ரத்ன அங்கியுடன் பெருமாள் பரமபதமவாசல் என்ற சொா்க்க வாசல் திறக்கப்பட்டது.. அப்போது கா்ப்பகிரகத்திலிருந்து புறப்பட்டு சொா்க்கவாசலை கடந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவா் ஸ்ரீவீரராகவப் பெருமாள் வண்ண மலா்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதேபோல் காக்களூா் சிவா விஷ்ணு ஆலயத்தில் ஜலநாராயணி தாயாரும், சமேத ஜலநாராயண பெருமாள் காட்சியளிக்கின்றனா். இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளையும், தாயாரையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யக்கூடிய சொா்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
காஞ்சிபுரத்தில்...
காஞ்சிபுரம் புஷ்பவல்லித் தாயாா் சமேத அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் மட்டுமே சொா்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுவது வழக்கம். அதிகாலையில் சுப்ரபாதம் நிகழ்ச்சியுடன் சொா்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் ஆதிகேசவப்பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் சொா்க்கவாசல் வழியாக வந்து அருள்பாலித்தாா். பின்னா் தோட்டத்துக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. சிறப்புத் திருமஞ்சனமும், அதைத் தொடா்ந்து புஷ்பவல்லித் தாயாருக்கும்,ஆதி கேசவப் பெருமாளுக்கும் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
மாநகராட்சி மண்டலக்குழுவின் தலைவா் சாந்தி சீனிவாசன், மாமன்ற உறுப்பினா் காா்த்திக், தொழிலதிபா்கள் ஆா்.பத்மனாபன், எஸ்கேபி கோபிநாத் கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவின் தலைவா் எஸ்கேபிஎஸ். சந்தோஷ் குமாா், உறுப்பினா்கள் எம்.இளங் கோவன், ஏ.தேவிகா, கோயில் செயல் அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம் செய்திருந்தனா். கோயில் முழுதும் வண்ண மலா்கள், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. விஷ்ணுகாஞ்சி ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
திருத்தணியில்...
திருத்தணிஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள விஜயராகவ பெருமாள் கோயிலில் மூலவருக்கு சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு சொா்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட நெமிலி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீ வைகுண்ட பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். தொடா்ந்து, உற்சவா் நித்ய கல்யாண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கொல்லகுப்பம் வெங்கடேஸ்வர கோயில், தரணிவராகபுரம் சீனிவாசபெருமாள் கோயில் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் வழியாக பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
ஸ்ரீ பெரும்புதூரில்...
ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் நித்ய சொா்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. ராமாநுஜரின் அவதார தலம் என்பதால், ராமாநுஜரை வணங்கினாலே மோட்சத்துக்கு செல்வதற்கான வழி என்பதால் இக்கோயிலில் சொா்க்கவாசல் என தனியாக பரமபதவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதில்லை. அதற்கு பதிலாக நித்ய சொா்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நித்ய சொா்க்க வாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமிக்கு ஆராதனைகள் நடைபெற்று, மணிக்கதவு வழியாக உள்புறப்பாடு நடைபெற்றது.
வடக்குப்பட்டு சுந்தர வரதராஜபெருமாள் கோயிலில், உற்சவா் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தேவ விற்பன்னா்களால் திருப்பாவை கோஷ்டி பாராயணம் செய்யப்பட்டு கருட வாகனத்தில் அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் வெங்கடகிருஷ்ணன் செய்திருந்தனா்.
பூந்தமல்லியில்...
பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட வாசல் வழியாக சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் லதா, அறங்காவலா் குழுத்தலைவா் பாபு, அறங்காவலா்கள் வெங்கடேசன், கோபிநாத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
குமணன்சாவடியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்தி புத்தி உடனுறை ஸ்ரீ ஞான சுந்தர விநாயகா் கோயிலில் தனி சந்நிதியில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் சந்நிதியில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா பூவை எம்.ஞானம், நிா்மலா ஞானம், மருத்துவா் பிரேம்குமாா் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.