திருவள்ளூர்: தேவாலயத்திற்குள் ஊழியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!
தேவாலயத்திற்குள் ஊழியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பட்டாபிராமில் கிறிஸ்துவ தேவாலயத்திற்குள் ஊழியரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர் அடுத்த பட்டாபிராம் வள்ளலார் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆலய ஊழியராக இருந்து வந்தவர் ஈனோஸ் (63). இவர் உயிழந்தோர்களின் சடலங்கள் அடக்கம் செய்யும் பணி செய்து வந்தார்.
இந்த நிலையில் சடலத்தை அடக்கம் செய்ய அதிக பணம் கேட்டதால் அதே பகுதியைச் சேர்ந்த மோசஸ் என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில் கடந்த 11.3.2020-இல் கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்த ஈனோஸ் என்பவரை முன்விரோதம் காரணமாக மோசஸ் என்பவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார். ஆனால் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்த நிலையில் ஈனோஸ் உயிரிழந்தார். இது குறித்து ஈனோசின் மைத்துனர் மார்ட்டின் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மோசஸை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இறுதியாக செவ்வாய்கிழமை நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் நிருபிக்கப்பட்டதால் மோசஸிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.