திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஒளிர் திரையில், ஏழுமலையான் பாடலுக்குப் பதிலாக திடீரென ஹிந்திப் படப் பாடல் ஒளிபரப்பானதைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த எல்டிஇ ஒளிர் திரையில், திடீரென ஹிந்திப் படப் பாடல் ஒளிபரப்பானது. வழக்கமாக திருப்பதி ஏழுமலையானைப் பற்றிய பக்திப் பாடல்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் அந்த திரையில் திரைப்படப் பாடல் அதுவும் ஹிந்திப் பாடல் ஒளிபரப்பானதைப் பார்த்து ஏழுமலையானின் தீவிர பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏதோ ஒரு சில நொடிகளில் பாடல் மாற்றப்படவில்லை. சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து ஹிந்திப் பாடல் ஒளிபரப்பானது. இதனை அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது செல்லிடப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர, அது வைரலானது.
ஒளிர்திரைகளில் ஒளிபரப்பு செய்யும் பணிகளை திருப்பதி தேவஸ்தானம் மேற்பார்வை செய்யாததாலும், அங்கு பணியிலிருந்தவர்களின் கவனக்குறைவாலும் இந்த சம்பவம் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது செட்டாப் பாக்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் தேவஸ்தான ஊழியர்கள் கூறியுள்ளனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.