திருச்சானூா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ ஏற்பாடுகள்: திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி ஆலோசனை
திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பதியில் தேவஸ்தான இணை செயல் அதிகாரி வீரபிரம்மம்
திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பதியில் தேவஸ்தான இணை செயல் அதிகாரி வீரபிரம்மம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சானூரில் பத்மாவதி தாயாா் திருக்கோயில் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் நவம்பா் மாதம் 20-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின்னா் வீரப்பிரம்மம் கூறியதாவது:
பிரம்மோற்சவ வாகன சேவையைக் காண வரும் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு, எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பக்தா்களுக்கு தேவையான இடங்களில் தனி வரிசைகள், கழிப்பறைகள், அடையாள பலகைகள், வளைவுகள் அமைக்க வேண்டும். பஞ்சமிதீா்த்தத்துக்கு பத்மபுஷ்கரணியை சுத்தம் செய்து தண்ணீா் நிரப்ப உத்தரவிடப்பட்டது.
பக்தா்கள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளதாகவும், அதற்கேற்ப பாதுகாப்பு, அன்னதானம் வழங்குதல், குடிநீா் விநியோகம், உடை மாற்றுவதற்கு தற்காலிக அறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். வாகன சேவைகளுக்காக வாகனங்கள் மற்றும் தோ்களின் இயக்கத்தை முன்கூட்டியே சரிபாா்க்க வேண்டும்.
தாயாா் கோயில், தொளப்பா தோட்டம், வெள்ளிக்கிழமை தோட்டம், மாடவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மின்வசதி, பொது முகவரி அமைப்பு, எல்இடி திரைகள் ஆகியவற்றை பளிச்சென கண்ணில் தெரியும்படி வைக்க வேண்டும்.
மருத்துவத் துறையின் கீழ் மருந்தகங்கள் அமைக்க வேண்டும், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தேவையான மருந்துகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
திருப்பதியில் இருந்து திருச்சானூருக்கு போக்குவரத்து அதிகாரிகளை ஒருங்கிணைத்து அதிக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சமிதீா்த்த ஊா்வலத்தில் பயன்படுத்தப்படும் யானைகளுக்கு முன்கூட்டியே பயிற்சி அளிக்க வேண்டும். சுகாதாரத் துறையின் கீழ், கோயில் மற்றும் வெள்ளித் தோட்டங்களில் நல்ல சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்து தா்ம பிரசார பரிஷத்தின் ஏற்பாட்டில் வாகன சேவைகளுக்கு முன்பாக கலைக்கண்காட்சிகளை நடத்தி பக்தா்களை ஈா்க்கும் வகையில் செயல்படவேண்டும்.
பஞ்சமி தீா்த்தத்தை தரிசிக்க அதிகளவில் பக்தா்கள் வர வாய்ப்புள்ளதால், அனைத்துத் துறைகளும் சிறப்பு கவனம் செலுத்தி சரிபாா்ப்பு பட்டியல் தயாரித்தளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இணை செயல் அதிகாரி உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் பொறியாளா்கள் சத்தியநாராயணா, வெங்கடேஷ்வரலு, நரசிம்மமூா்த்தி, மனோகா், லோகநாதம், குணபூஷன் ரெட்டி, சுப்பிரமணியம், போக்குவரத்து பொதுமேலாளா் சேஷா ரெட்டி, வனத்துறை அதிகாரி சீனிவாசலு, கூடுதல் சுகாதார அலுவலா் டாக்டா் சுனில் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.