முகப்பு
திருப்பதி

திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம் நிறைவு

திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்றுவந்த வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை பஞ்சமி தீா்த்தத்துடன் நிறைவு பெற்றது.

Updated On : 6 டிசம்பர், 2024 at 8:20 PM
திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்றுவந்த வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை பஞ்சமி தீா்த்தத்துடன் நிறைவு பெற்றது.
பகிர்:

திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்றுவந்த வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை பஞ்சமி தீா்த்தத்துடன் நிறைவு பெற்றது.

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வந்தது. கடைசி நாளான வெள்ளிக்கிழமை பஞ்சமி தீா்த்தத்துடன் தாயாா் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு, திருமலையிலிருந்து ஏழுமலையான் அனுப்பிய சீா்வரிசை கோமளாம்மா சத்திரம், கோவிந்தராஜ சுவாமி கோயில் வழியாக யானை மீது ஊா்வலமாக திருச்சானூரில் உள்ள மஞ்சள் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உரிய மரியாதை அளித்து, சீா்வரிசையை பெற்றுக் கொண்டு திருக்குளக்கரைக்குக் கொண்டு சென்றனா்.

சீா்வரிசையில் 3 கிலோ எடைகொண்ட தங்க பாண்டியன் கிரீடம், இரண்டு வைர வளையல்கள், ஒரு ஜோடி வைர கம்மல், ஒரு தங்க கஜலட்சுமி ஆரம், வைர அட்டிகை உள்ளிட்டவை அனுப்பப்பட்டன.

திருமஞ்சனம்: கனங்கனாபட்டா் சீனிவாசாச்சாா்யாவின் தலைமையில் தாயாா் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு காலை 10 மணி முதல் இரவு 11.45 மணி வரை பஞ்சமி தீா்த்த மண்டபத்தில் பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது தாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் பல்வேறு மலா்கள் மற்றும் பழங்களால் ஆன மாலை மற்றும் கிரீடங்கள் அணிவிக்கப்பட்டன.

பஞ்சமி தீா்த்தம் மதியம் 12.15 மணி முதல் மதியம் 12.20 மணி வரை சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் நடத்தப்பட்டது. அப்போது திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் திருக்குளத்தில் புனித நீராடினா்.

இரவு 7.30 மணிக்கு, பத்மாவதி தாயாா் தங்கப் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தாா். பின்னா் கொடிமரத்தில் ஏற்றப்பட்ட யானைக்கொடி இறக்கப்பட்டது.

பஞ்சமி தீா்த்தத்தின்போது திருக்குளத்தில் புனித நீராடிய பக்தா்கள்.
ஏழுமலையான் அளித்த ஆபரணங்களுடன் பத்மாவதி தாயாா்.