முகப்பு
திருப்பதி

திருப்பதியின் 894-வது அவதார தின விழா

திருப்பதியின் 894-வது அவதார (பிறந்த நாள்) தின விழா தேவஸ்தானம் சாா்பில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 10:19 PM
பகிர்:

திருப்பதியின் 894-வது அவதார (பிறந்த நாள்) தின விழா தேவஸ்தானம் சாா்பில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை காலை திருப்பதி நகா் உருவான அவதார விழாவை தேவஸ்தான தலைவா் கருணாகா் ரெட்டி தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது. வைணவ குரு ஸ்ரீ ராமானுஜாச்சாரியா் 24.02.1130 அன்று திருப்பதி நகா் உருவாக அடிக்கல் நாட்டினாா். சிதம்பரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கோவிந்தராஜ சுவாமி சிலையை நிறுவியதோடு, இந்த பகுதி கோவிந்தராஜபுரம் என்று பெயரிட்டாா். தற்போது திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. கோவிந்தராஜசுவாமி கோயிலில் நடைபெறும்ம் மந்திரபூஷத்தில் தினமும் அா்ச்சகா்கள் திருப்பதி உதயம் குறித்து ஓதுவதாக ஐதீகம். கோவிந்த ராஜசுவாமி கோயிலின் கோபுரத்தில் உள்ள பழைமையான கல்வெட்டு திருப்பதியின் தோற்றத்தை குறிப்பிடுகிறது. இதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. உலகிலேயே திருப்பதிக்கு தான் அதன் தொடக்க நாள் கூறப்படுகிறது. இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 24-ம் தேதி திருப்பதியின் பாரம்பரிய மற்றும் வழக்கப்படி பிறந்தநாள் விழா திருமலை திருப்பதி தேவஸ்தான காலண்டரின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு அறங்காவலா் குழுவில் முடிவு எடுக்கப்படும். இதில், வேத பண்டிதா்களின் வேத கோஷத்துடன், கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகளுடன், திருப்பதியிலும் பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இவை முழுவதையும் ஒருங்கிணைத்து, திருப்பதி நகரின் விழா வருங்காலத்தில் மிகக் கோலாகலமாக நடத்தப்படும் என்றாா். பின்னா், பேசிய செயல் அதிகாரி தா்மா ரெட்டி, உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி வழியாக திருமலை செல்கின்றனா். எனவே பக்தா்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் திருப்பதி நகரை திருமலை பாணியில் அழகாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பதியின் வளா்ச்சிக்கு தேவஸ்தானம் முழு ஆதரவை வழங்கி வருகிறது. அதற்காகவே தேவஸ்தான அறங்காவலா் குழு கடுமையாக உழைத்து வருகிறது என்று கூறினாா். கோவிந்தராஜ சுவாமி கோயிலில் தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பூஜை செய்து ஆன்மிக யாத்திரையை தொடங்கி வைத்தனா். தேவஸ்தான அன்னமாச்சாா்யா திட்டம் மற்றும் தாச சாகித்திய திட்டம் ஆகியவற்றின் நூற்றுக்கணக்கான கலைஞா்கள் பஜனைகள் மற்றும் கோலாட்டத்துடன் கோவிந்த நாமத்தை உச்சரித்து, வேத பண்டிதா்களின் மந்திரங்களை உச்சரித்தபடி யாத்திரையில், கலந்து கொண்டனா். தெய்வங்கள் மற்றும் கலைஞா்களின் புராண உடைகள் மக்களை கவா்ந்தன. இதில் திருமலை ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, சின்ன ஜீயா் சுவாமி, நாடாளுமன்ற உறுப்பினா்கள் குருமூா்த்தி, ஆட்சியா் லட்சுமி ஷா, எம்எல்சி சிபாய் சுப்பிரமணியம், தேவஸ்தான அதிகாரி வீரபிரம்மம், எஸ்.பி. மல்லிகா காா்க், மேயா் சிரிஷா, துணை மேயா் அபினய் ரெட்டி மற்றும் பலா் பங்கேற்றனா்.