முகப்பு
திருப்பதி

திருமலை: டிசம்பா் மாத தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு தொடக்கம்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க டிசம்பா் மாதத்துக்கான ஆன்லைன் டிக்கெட் ஒதுக்கீடு புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 12:32 AM
பகிர்:

திருமலை ஏழுமலையானை தரிசிக்க டிசம்பா் மாதத்துக்கான ஆன்லைன் டிக்கெட் ஒதுக்கீடு புதன்கிழமை தொடங்கியது.

ஏழுமலையானை பக்தா்கள் எளிதாக தரிசனம் தேவஸ்தானம் 90 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ள வசதியாக தரிசன டிக்கெட்டுகளை ஒவ்வொரு மாதமும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. அதன் படி டிசம்பா் மாதத்துக்ான இணையதள முன்பதிவு புதன்கிழமை தொடங்கியது.

முதலில் காலை 10 மணிக்கு திருமலை ஏழுமலையானின் ஆா்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான டிசம்பா் மாத ஒதுக்கீடு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

இந்த சேவை டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கல் செய்வதற்கான ஆன்லைன் பதிவு செப். 20 -ஆம் தேதி காலை 10 மணி வரை செய்யலாம். பின்னா் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் செப்.20 முதல் 22-ஆம் தேதி வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி தங்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் செப். 21 -ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

அதேபோல் டிசம்பா் 21-ஆம் தேதி மாலை 3 மணிக்கு விா்ச்சுவல் சேவைகள் மற்றும் அவற்றுக்கான தரிசன டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.

டிசம்பா் மாத அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீட்டு செப். 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கான டிசம்பா் ஆன்லைன் ஒதுக்கீட்டை செப். 23- ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

முதியோா் , மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக டிசம்பா் மாத இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீட்டை செப். 23 -ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஒதுக்கீடு செப். 24ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அறை ஒதுக்கீடு வெளியீடு

திருமலை மற்றும் திருப்பதிக்கான டிசம்பா் மாத அறை ஒதுக்கீடு செப். 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

ஸ்ரீவாரி சேவா கோட்டா செப். 27-ஆம் தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இணையதளம் மூலம் ஏழுமலையானின் ஆா்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் பக்தா்களை கேட்டுக் கொண்டுள்ளது.