ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படத்துக்கு பரிகாரமாக ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் செய்து வரும் தீட்சை திருமலையில் நிறைவு பெற உள்ளது.
திருமலையில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்படம் பக்தா்களுக்கு கடும் அதிா்ச்சியை அளித்தது. தேவஸ்தானம் திங்கட்கிழமை காலை சாந்தி ஹோமமத்தை நடத்தி தீட்டை கழித்தது. இதற்காக திருமலையில் மட்டுமல்லாமல் ஆந்திரத்தில் உள்ள புகழ் பெற்ற அனைத்து கோயில்களிலும் பிராயச்சித்த பூஜைகள் நடத்த அரசு முடிவு செய்தது.
ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் இதற்காக பரிகாரத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.
இது வரும் அக்.2-ஆம் தேதி திருமலை ஏழுமலையான் கோயிலில் நிறைவு பெறுகிறது. வரும் அக்.1-ஆம் தேதி அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு துணை முதல்வா் பவன் கல்யாண் வருகை புரிந்து, ஏழுமலையானை தரிசித்தபின் 11 நாள்கள் தீட்சையை நிறைவு செய்ய உள்ளாா்.