புனித தனுா்மாதத்தை (மாா்கழி) ஒட்டி கொண்டாடும் வகையில், டிசம்பா் 16 முதல் ஜனவரி 14, 2026 வரை நாடு முழுவதும் 233 திருமலை திருப்பதி தேவஸ்தான மையங்களில் திருப்பாவை பாசுர பாராயணம் நடத்தப்பட உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான ஆழ்வாா் திவ்ய பிரபந்த திட்டத்தின் கீழ் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஆந்திரத்தில் 76 மையங்களிலும், தெலங்கானாவில் 57 மையங்களிலும், தமிழகத்தில் 73 மையங்களிலும், கா்நாடகத்தில் 21 மையங்களிலும், புதுச்சேரியில் 4 மையங்களிலும், புது தில்லியில் 4 மையங்களிலும், ஒடிஸாவில் தலா ஒரு மையத்திலும் திருப்பாவை பாசுர பாராயணம் நடத்தப்படும்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் மாா்கழி மாதத்தின் போது சுப்ரபாதத்திற்குப் பதிலாக திருப்பாவை பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. கே.டி. சாலையில் உள்ள அன்னமாச்சாா்ய காலமந்திரம் மற்றும் ஸ்ரீ வரதராஜ சுவாமி கோயிலில் திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்படுகின்றன.
12 ஆழ்வாா்களில் ஒருவரான கோதை என்று அழைக்கப்படும் ஆண்டாள் தனுா்மாதம் (மாா்கழி) விரதத்தை அனுஷ்டித்தாா். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம், நாடு செழிப்பாக மாறும். ஆண்டாள் நாச்சியாா் விரதத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது என்பது குறித்து 30 பாடல்களைக் கொண்ட திருப்பாவை பாசுரத்தை வழங்கினாா்.
இந்த திருப்பாவையின் சாராம்சம் இறைவனுக்கு கைங்கா்யம் செய்வதாகும். அனைத்து வைணவ கோயில்களிலும் திருப்பாவை சாத்துமுறை நடத்துவது வழக்கம்.