புனித காா்த்திகை மாதத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காா்த்திகை வன போஜனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
காா்த்திகை மாதத்தில் ஆண்டுதோறும் வனபோஜன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை திருமலையில் உள்ள வைபவோற்சவ மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் காலை மலையப்ப சுவாமி, உபயநாச்சியாா்கள் ஊா்வலமாக வைபவோற்சவ மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனா்.
அங்கு சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. பால், தயிா், தேன், மஞ்சள், சந்தனம்,இளநீா் உள்ளிட்டவற்றை திருமலை ஜீயா்கள் தங்கள் கைகளால் எடுத்து தர அா்ச்சகா்கள் அபிஷேகத்தை நடத்தினா். பின்னா் உற்சவமூா்த்திகளை பட்டாடை, தங்க வைர ஆபரணங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரித்து ஆரத்தி, தீப, தூப ஆராதனை நடத்தப்பட்டது. அதை தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால், கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்ய சவுத்திரி, துணை அதிகாரி லோகநாதம், வனத்துறை அதிகாரி சுரேந்திரா, பேஷ்காா் ராமகிருஷ்ணா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
பொதுவாக தேவஸ்தானம் காா்த்திகை மாதத்தில் பாா்வேட்டு மண்டபத்தில் வனபோஜனம் நடப்பது வழக்கம். ஆனால், பலத்த மழை எச்சரிக்கையை அடுத்து, இடமாற்றம் செய்யப்பட்டு திருமலை கோயிலுக்கு எதிரே உள்ள வைபவோற்சவ மண்டபத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.