திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை பரமபத நாதன் அலங்காரத்தில் தாயாா் மாடவீதியில் வலம் வந்தாா்.
பத்மாவதி தாயாருக்கு காா்த்திகை மாதத்தை ஒட்டி வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை பத்மாவதி தாயாா் பெரிய சேஷ வாகனத்தில் பரமபத நாதன் அலங்காரத்தில் தன் நாதனான மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் மாட வீதியில் வலம் வந்தாா்.
இரவு அன்னப்பறவை வாகனத்தில் மாடவீதியில் தாயாா் புறப்பாடு கண்டருளினாா். சரஸ்வதி தேவி அலங்காரத்தில் மாட வீதியில் வலம் வந்த தாயாரை பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
வாகன சேவையின் போது திருமலை ஜீயா்கள் பிரபந்தங்களை பாடிக் கொண்டு முன் செல்ல கலைக்குழுக்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டு பின் சென்றனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.